சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், நேற்று நடைபெற்றது. அப்போது, அமைச்சர் பேசியதாவது:
மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் முடிவுற்றவுடன் சாலை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப் பெற்று போக்குவரத்திற்கு இடையூறின்றி இருக்கும் நிலையினை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
பொதுமக்களுக்கு தங்குதடையற்ற வகையில் குடிநீர் வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நகர்ப்புற சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
மேலும், நடமாடும் சுகாதாரக் குழுக்களை அமைத்து மழையினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் விரைவாக சென்று மருத்துவ உதவிகள் அளிக்கப்பட வேண்டும். அனைத்து சுகாதார மையங்களிலும் போதிய மருந்துகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழையின்போது, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.விஜயகுமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஹனீஸ் சாப்ரா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கே. விவேகானந்தன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ்.சிவராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.