தாம்பரம்: தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார்.
அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணியினை மேற்கொண்டு விரைந்து முடித்திட வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீரை வெளியேற்றும் மின்மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை உடனடியாக மாற்றுவது, தாழ்வாக உள்ள மின்கம்பிகளை சரிசெய்வது, வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் மின்கம்பிகள் மீதுள்ள மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும், மாவட்டத்திலுள்ள ஏரியின் மதகுகளில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும்.
ஏரிகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும், கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும்,
பொது சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் தேவையற்ற உபகரணங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும், நீர்த்தேக்க தொட்டிகளில் முறையாக குளோரினேஷன் செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், குப்பையை நாள்தோறும் அகற்ற வேண்டும், வரும் மழைக்காலங்களில் மக்களை பாதுகாக்க அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், எம்எல்ஏக்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டலக்குழு தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.