சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அனைத்து மாவட்டங்களிலும் சமமான வளர்ச்சி என்ற அடிப்படையில் சாலைகள், பாலங்கள், வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற நகரமாக தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகின்றது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சியடைவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 238 பணிகள் 6,876.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து பல்வேறு அரசுத் துறை உயர் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
வட சென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 822.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பிராட்வே பேருந்துநிலையம் உட்பட பேருந்து நிலையங்களின் மேம்பாட்டு பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், 53.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ நிறுவனத்தில் புதிய சூப்பர் ஸ்பெசாலிட்டி பிரிவு கட்டடம் கட்டும் பணி உட்பட ஆய்வகங்களுடன் கூடிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள்,மகப்பேறு மருத்துவமனை கட்டடங்கள், பள்ளிக்கூட கட்டடங்கள், பூங்காக்கள். 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொளத்தூரில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைத்தல் உட்பட உள்ளரங்க விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் குடிநீர் விநியோக கட்டமைப்பினை மேம்படுத்தும் பணிகள், கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளை சீரமைத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகள், நூலக கட்டடங்கள், சமுதாயக்கூடங்கள், கடற்கரைகளை அழகுபடுத்தி மேம்படுத்தும் பணிகள், ஏரிகளை மேம்படுத்துதல். மீன் அங்காடிகள், நவீன காய்கறி விற்பனை கூடங்கள் கட்டுதல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், புதிய மின்மாற்றிகள் அமைத்தல், துணை மின் நிலையங்கள் அமைத்தல் உட்பட மின் விநியோக சீரமைப்பு பணிகள், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் உள்ளிட்ட 238 பணிகள் 6,876.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்ற முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.
இவற்றில், இதுவரை 8 இடங்களில் LPG மூலம் இயங்கக்கூடிய எரிவாயு மயானங்கள் அமைத்தல், 7 இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், மறுசீரமைக்கப்பட்ட 3 பூங்காக்கள், மழைநீர் உறிஞ்சும் 2 (ஸ்பான்ச்) பூங்காக்கள், ஏரி குளங்கள் சீரமைத்து அழகுபடுத்தும் 6 பணிகள், வெள்ளநீர் தடுப்பு பணிகள் உள்ளிட்ட 774.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 47 பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர, தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அரசுத் துறை உயர் அலுவலர்களுக்கு அறிவுருத்தினார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், வீட்டு வசதி மற்றும் நகர்புர வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார். நிதித் துறை முதன்மைச் செயலாளர் த. உதயசந்திரன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பி. சந்தரமோகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன்,. உயர் கல்வித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், உள்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.