Thursday, April 18, 2024
Home » வடசென்னை தொகுதியில் போட்டி முதலில் யார் வேட்பு மனு செய்வது? திமுக-அதிமுக வேட்பாளர்கள் மோதல்: போலீசார் சமரசம்

வடசென்னை தொகுதியில் போட்டி முதலில் யார் வேட்பு மனு செய்வது? திமுக-அதிமுக வேட்பாளர்கள் மோதல்: போலீசார் சமரசம்

by Karthik Yash

சென்னை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு யார் முதலில் வேட்பு மனு செய்வது என்பதில் திமுக – அதிமுக வேட்பாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. துணை ஆணையர் தலைமையிலான போலீசார் இரு தரப்பையும் சமரசம் செய்தனர். வடசென்னை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கினர். இந்நிலையில் நேற்று காலை திமுக வேட்பாளரான கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளரான ராயபுரம் மனோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் அங்கு வந்தனர்.

அப்போது முதலில் யார் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் அமைச்சர் சேகர்பாபு, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், மேயர் பிரியா ஆகியோர் வந்தனர். இஅதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ். ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அப்போது அதிமுக தரப்பில் மனோ, ஜெயக்குமார் ஆகியோர் ஒரு தடித்த வார்த்தை பேசியதையடுத்து வார்த்தையை அளந்து பேசுமாறு அமைச்சர் சேகர்பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் நாங்கள்தான் முதலில் டோக்கன் வாங்கினோம், எனவே நாங்கள்தான் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று அமைச்சர் கூறினார். ஐந்து முறை எம்எல்ஏவாக, நிதி அமைச்சராக இருந்துள்ளேன். சபாநாயகராக இருந்தேன். எனவே என்னுடைய வேட்பு மனுவைத்தான் முதலில் வாங்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார். இதற்கு சேகர்பாபு எதிர்ப்பு தெரிவித்ததற்கு, அவரை அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் திட்டினார். இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வந்து சமரசத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தேர்தல் அலுவலர் கட்டா ரவி தேஜா, தமிழ்நாடு தேர்தல் நடத்தும் அதிகாரியான சத்தியபிரதா சாகுவை செல்போனில் தொடர்பு கொண்டதையடுத்து முதலில் யார் டோக்கன் வாங்கினார்களோ அவர்களது வேட்பனுவை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து, 7வது டோக்கன் பெற்ற அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை வாங்க முயன்றபோது, மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 2வது டோக்கன் வாங்கிய திமுகவின் மாற்று வேட்பாளரான கலாநிதி வீராசாமியின் மனைவி ஜெயந்தியின் மனுவை முதலில் தேர்தல் அதிகாரி வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ மனுவை தேர்தல் அதிகாரி பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கலாநிதி வீராசாமி மனுவை தாக்கல் செய்தார். பின்னர் பாஜ வேட்பாளர் பால் கனகராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

* கேப்பில் புகுந்த பாஜவினர்
திமுக, அதிமுக மோதல் நடந்த தேர்தல் நடத்தும் அலுவலரின் அறையின் உள்ளே புகுந்த பாஜவினர் எவ்வளவு நேரம் இந்த பஞ்சாயத்து நடைபெறும்? ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்திருப்பீர்களா? அவர்கள் பஞ்சாயத்தை பிறகு வைத்து கொள்ளுங்கள், நீங்கள் முதலில் எங்களது வேட்புமனுவை வாங்கிக் கொள்ளுங்கள் என உள்ளே நுழைந்து வாக்குவாதம் செய்ததையடுத்து போலீசார் அவர்களிடம் பேசி அறையை விட்டு வெளியே அனுப்பினர். ஒருபுறம் திமுக – அதிமுக வேட்பு மனுவில் முதலில் எதை பெறுவது என்ற பிரச்னையும், மறுபுறம் பாஜவினரின் பிரச்னையும் நிகழ்ந்ததால் அலுவலகம் பதற்றத்துடன் காணப்பட்டது.

* போக்குவரத்து பாதிப்பு
திமுக மற்றும் அதிமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மூலக்கொத்தளம் சாலையில் கட்சி கொடியுடன் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அமைச்சர் சேகர்பாபு வெளியே சென்றபோது அதிமுகவினர், பாஜவினர் சேகர்பாபுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்த பிரச்னைக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியும், காவல்துறையும் தான் காரணம். அவர்கள் உரிய முறையில் இதனை கையாளாமல் விட்ட காரணத்தால் பிரச்னை ஏற்பட்டதாக கூறினர். மேலும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கச் சென்றபோது அவர்களை விடாமல் போலீசார் தடுத்தனர். இதனாலும் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

1 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi