டெல்லி : வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக பஞ்சாப்பில் வெள்ளத்தில் சிக்கிய காரில் அடித்துச் செல்லப்பட்ட 9 பேர் உட்பட 32 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்தது. பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தேங்கி நின்றன. ஹரியானாவில் குருகிராமில் 7 செமீ மழைப் பெய்த நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக மாறின. பஞ்சாப் தலைநகர சண்டிகரில் 12 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் கனமழை இடைவிடாமல் கொட்டியது. இதனால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்க நேரிட்டது. நொய்டா நகரில் பலத்த மழை காரணமாக சாலைகள், நீரோடும் ஆறுகளாக மாறின. தண்ணீரில் பாதி மூழ்கிய நிலையில், வாகனங்களை மக்கள் சிரமத்துடன் இயக்கி அப்பகுதிகளை கடந்துச் சென்றன.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஹிமாச்சல பிரதேசம் நஹா நகரில் மணிகண்டா ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் ஜேசிபி மூலம் மீட்கப்பட்டன. ராஜஸ்தானில் கனமழைக்கு 2 நாட்களில் 17 பேர் பலியான நிலையில், வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை கொட்டிய நிலையில், ஹரித்வார் அருகே கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்னும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.