பெரம்பூர்: வடசென்னை எம்கேபி நகர் பகுதியில் 150 கடைகளை திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னையில் நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பகல் நேரம் போலவே இரவு நேரங்களிலும் அதிக இடங்களில் பணிகள் நடைபெறுவதால் மக்கள் எப்போதும் சாலையில் உள்ளதை பார்க்க முடிகிறது. இதேபோல் இரவு நேரங்களிலும் பல உணவகங்கள் திறந்துள்ளன. இதனால் சில இடங்களில் இரவு நேரங்களில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக டிநகர், பாரிமுனை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களிலும் போக்குவரத்து எரிச்சல் ஏற்படுவதையும், சாலையோர கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உணவு அருந்தச் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதையும் பார்க்க முடிகிறது. வருங்காலத்தில் இந்த பிரச்னை இன்னும் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் சென்னை மாநகராட்சி இதற்கு பல்வேறு வழிகளில் தீர்வு கண்டு வருகிறது.
குறிப்பாக சென்னையில் 776 பகுதிகள் விற்பனை செய்யக்கூடிய மண்டலங்களாகவும், 491 பகுதிகள் விற்பனை செய்யக்கூடாத மண்டலங்களாகவும் அறிவிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது வியாபாரிகளை எந்த அளவிலும் பாதிக்கக்கூடாது, அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் பிரச்னை ஏற்படக்கூடாது என்ற ரீதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈவேரா பெரியார் சாலை, புதிய ஆவடி சாலை, திருமங்கலம் சாலை, கொளத்தூர் பிரதான சாலை, பிரகாசம் சாலை, மூலச்சத்திரம் பிரதான சாலை, லேபர் காலனி ஜோன் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் சாலைகளில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பல்வேறு விதமான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தள்ளுவண்டிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலான வட மாநில நபர்களும் அதிகம் சாலையோர கடைகளை நம்பி வசித்து வருகின்றனர். இதனால் சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. இதற்காக போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதிகளில் சென்னை மாநகராட்சி கடைகளை கட்டி அந்த இடத்தில் வியாபாரிகள் கடைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் வடசென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலையோர வியாபாரிகளை சீர் செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டு எம்கேபி நகர் வடக்கு அவென்யூ சாலை பகுதியில் அமைந்துள்ள கேப்டன் கார்டன் கால்வாய் அருகே உள்ள இடம் மாநகராட்சி சார்பில் கடைகள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. 270 மீட்டர் நீளமும், 14 மீட்டர் அகலமும் கொண்ட இந்த இடத்தில் 150 கடைகள் கட்டப்படவுள்ளன.
எம்கேபி நகர் பேருந்து நிலையம் மற்றும் எம்கேபி நகர் மேம்பாலம் கீழ்பகுதியில் பல்வேறு துரித உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பர்மா உணவு வகையான அத்தோ கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை ஒழுங்குபடுத்தி குறிப்பிட்ட எம்கேபி நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்படும் இடத்தில் இந்த கடைகள் அமைக்கப்பட்டால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
தற்போது மாநகராட்சி தேர்வு செய்துள்ள இடம் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடம் என்பதால் இந்த பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் எதிர்பார்க்கின்றனர். எனவே மாநகராட்சி விரைந்து செயல்பட்டு அந்த பகுதியில் புதிய கடைகளை திறக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
* குற்ற செயல்களை தடுக்க முடியும்
குறிப்பிட்ட 37வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினராக இருப்பவர் டில்லி பாபு. எம்கேபி நகர் பகுதியில் 150 கடைகள் மாநகராட்சி மூலம் வருவது குறித்து அவர் கூறுகையில், வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர் பகுதிகள் 10 வருடத்திற்கு முன்பு இருந்த பகுதி போல தற்போது இல்லை. மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகரித்து விட்டது. எம்கேபி நகர் பகுதி மக்கள் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட் செல்ல வேண்டுமென்றால் சர்மா நகர் மார்க்கெட் அல்லது எம்ஆர்நகர் பகுதிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
புதிய கடைகள் கட்டப்பட்டு விட்டால் இந்த பகுதியில் மார்க்கெட், காய்கறி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்டவை வரும். இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அதே நேரத்தில் அம்பேத்கர் கல்லூரி தொடங்கி கண்ணதாசன் நகர் இபி வரை வழிநெடுக இரு புறங்களிலும் துரித உணவகங்கள் அதிகரித்து விட்டன. குறிப்பிட்ட ஒரே இடத்தில் கடைகள் கட்டப்பட்டால் அந்த இடத்தில் இந்த உணவகங்கள் மாற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும்.
மேலும் தற்போது கடைகள் கட்டுவதற்கு பார்க்கப்பட்டுள்ள இடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் முறைகேடாக நிறுத்தப்படுகின்றன. இதில் இரவு நேரங்களில் தவறான செயல்கள் நடைபெறுகிறது. எனவே அந்த இடத்தை மாநகராட்சி பயன்படுத்தும் போது குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்க முடியும். இது குறித்து நான் 3 முறை மாமன்றத்தில் பேசியுள்ளேன். அப்பகுதியில் குடியிருப்போர் நல சங்கங்களும் இது குறித்து பலமுறை வலியுறுத்தியுள்ளனர். எனவே மாநகராட்சிக்கும் அந்த கடைகள் கட்டும் பட்சத்தில் வருமானம் அதிகரிக்கும். எனவே மாநகராட்சி இந்த இடத்தை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார் .
* முறையாக கணக்கீடு
எம்கேபி நகர் பகுதியில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் கூறுகையில், தற்போது புதிய இடத்தில் 150 கடைகள் கட்டுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில் காலம் காலமாக எம்கேபி நகர் பகுதியில் துரித உணவகங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். எனவே முறையாக கணக்கீடு செய்து அதே பகுதியில் கடைகளை நடத்தி வரும் நபர்களுக்கு மாநகராட்சி கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதில் எந்த ஒரு முறைகேடும் நடந்துவிடக்கூடாது என தெரிவித்தனர்.