சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் 15.5.2023 முதல் தென் சென்னை, வட சென்னை என இரண்டாக பிரிக்கப்பட்டு தென்சென்னை அலுவலகம் டி.எம். எஸ். வளாகத்திலும், வட சென்னை அலுவலகம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தின் பின்புறத்திலும் இயங்கிவருகிறது. தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம், சென்னை கே.கே.நகர், மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் நடந்து வருகிறது.
சென்னை இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் வடசென்னை பகுதிக்குட்பட்ட 1 முதல் 8 வரையிலுள்ள (திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் அம்பத்தூர், அண்ணாநகர்) மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகள் வருகிற 8ம் தேதி முதல் அரசு ஸ்டான்லி மருத்துவமனை பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் மருத்துவ கல்லூரி எதிரில் சுரங்கப்பாதை அருகில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. முகாமில் இதுவரையில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம்-5, அசல் மற்றும் நகலுடன் வந்து தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.