சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் கோடியை தாண்டி திட்டப்பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், 700 புதிய குடியிருப்புகள், புதிய சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டு திடல் மேம்படுத்துதல், ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்பு பணிகளை துரிதப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
இதன் பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து கடந்த 2024ம் ஆண்டு 1000 கோடி என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இன்று ரூ.6,000 கோடியை தாண்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் இந்த பகுதியில் மட்டும் 700 குடியிருப்புகள் ரூ.122 கோடி செலவில் கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணியின் வேகத்தை பார்த்தால் ஐந்து மாதங்களில் ஐந்து அடுக்குகள் இன்றைக்கு கான்கிரீட் ஸ்லாப் போடப்பட்டு நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறைந்த அளவு வாடகை உள்ள திருமணம் மண்டபம் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. அதோடு உடற்பயிற்சி என்ற விழிப்புணர்வு அனைவரிடத்திலும் ஏற்பட்டிருக்கின்றது. இந்த பகுதிக்கு தேவையான அளவு ஒரு நல்ல விளையாட்டு அரங்கமும் அதே நேரத்தில் பொழுதுபோக்கு பூங்காவும் அமைப்பதற்கு திட்டமிட்டப்படட்டுள்ளது. இந்த அனைத்து பணிகளையும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர் ஆய்விலே ஈடுபட்டு இருக்கிறோம்.
தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் 776 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவும் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் குறிப்பிட்ட கால அளவுகள், கால அளவுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற தொலைநோக்கு பார்வையோடு திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த திட்டப் பணிகள் அனைத்தும் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் 70-75 சதவீதம் அளவிற்கு 2026 ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்வதற்கான முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு பேசினார்.
இந்த ஆய்வுகளின்போது சென்னை பெருநகர் வளர்ச்சி குழும முதன்மைச்செயல் அலுவலர் சிவஞானம், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, சி.எம்.டி.ஏ. கண்காணிப்பு பொறியாளர் ராஜமகேஷ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கண்காணிப்பு பொறியாளர் இளம்பருதி, மாநகராட்சி மண்டல அலுவலர் பரிதா பானு, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.