
மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் பீகார் யூடியூபர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் மேலும் 7 நாள் கஸ்டடி தேவை என்று போலீசார் தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்களின் உயிருக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பொய்யான கருத்துக்களையும், போலி வீடியோக்களையும் வெளியிட்டதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சச்தக் நியூஸ் என்ற யூடியூப் சேனலின் நிர்வாகி மனீஷ் காஷ்யப் (எ) டி.கே.திவாரி (32) என்பவர் மீது மதுரை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே பீகார் மாநிலம் ஜக்தீஷ்பூர் போலீசார், மனீஷ் காஷ்யப் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். பின்னர் காஷ்யபை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இவரை மதுரையில் உள்ள வழக்கில் விசாரிக்கும் வகையில் மதுரை சைபர் க்ரைம் போலீசார் கடந்த மார்ச் 30ல் மதுரை ஜேஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்த மாஜிஸ்திரேட், ஏப். 3ல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் காஷ்யப்பை தங்களது காவலில் வைத்து விசாரித்தனர். நீதிமன்ற அனுமதி காலம் முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களுக்கு நேற்று விடுமுறை என்பதால் மாஜிஸ்திரேட் டீலா பானுவின் முகாம் அலுவலகத்தில் காஷ்யப்பை நேற்று ஆஜர்படுத்தினர். அரசு வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆஜராகி, ‘‘போலீசாரின் விசாரணைக்கு காஷ்யப் ஒத்துழைக்கவில்லை. அவரிடம் இருந்து ஆவணங்களும் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது.
அவர் பணத்திற்காகவே பொய்யான தகவலை வதந்தியாக பரப்பியுள்ளார். இதற்காக பண பரிவர்த்தனையும் நடந்துள்ளது. அது குறித்து தடயங்களை சேகரிக்க வேண்டியுள்ளது. மேலும் கஸ்டடி வழங்காவிட்டால் பீகார் சென்றுவிடுவார். அவரிடம் மேலும் விசாரணை நடத்துவதும், வழக்ைக தொடர்வதும் மிகுந்த சிரமமாகிவிடும். எனவே, அவரிடம் மேலும் விசாரணை நடத்திடும் வகையில் மேலும் 7 நாள் கஸ்டடி வழங்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து மாஜிஸ்திரேட், ‘‘தற்போது நீதிமன்றம் விடுமுறையில் உள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. காஷ்யப்பை 2 நாள் பாதுகாப்பாக சிறையில் அடைக்க வேண்டும். வரும் 5ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும். அப்போது அவருக்கு மேலும் கஸ்டடி கேட்ட போலீசாரின் மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என கூறி விசாரணையை நாளைக்கு (ஏப். 5) தள்ளி வைத்தார்.