திண்டுக்கல்: காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை திண்டுக்கலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது அவர்கள் எங்களது தந்தை இறந்தபோது எந்த மனநிலையில் நாங்கள் இருந்தோமோ, அதுபோல் தற்போது எங்களது மனநிலை உள்ளது என கூறினர். இதுதான் மனிதர்களை மனிதர்கள் நேசிப்பது. இவர்கள்தான் உண்மையான தலைவர்கள். மணிப்பூரில் துயர சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை பிரதமர் மோடி செல்லவில்லை.
தற்போது வயநாட்டில் துயர சம்பவம் நடந்து 4 நாட்களாகியும் இதுவரை பிரதமர் மோடியோ, ஒன்றிய அமைச்சர்களோ, கவர்னரோ நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. இதற்கு காரணம் அவர்கள் கல் மனது கொண்டவர்கள். மக்கள் மீது நம்பிக்கை கிடையாது, அனுதாபம் கிடையாது. வயநாடு நிலச்சரிவு பற்றி கேள்விபட்டதும் தமிழக முதல்வர் உடனடியாக ரூ.5 கோடி நிவாரணம் வழங்கியுள்ளார். யார் தேசத்து மக்களை நேசிப்பவர்கள், இருப்பவர்கள் என மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு கூறினார்.