புதுடெல்லி: உலக சுற்று சூழல் தினத்தையொட்டி கேரள ஆளுநர் மாளிகையில் விழா நடந்தது. இதில் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் தலைமையில் நடந்த விழாவில், மாநில வேளாண் அமைச்சர் பிரசாத் கலந்து கொள்வதாக இருந்தது. அமைச்சர் பிரசாத் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். விழாவில் கையில் காவி கொடியுடன் பாரத மாதா புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. பாரத மாதா புகைப்படத்தை அகற்றாவிட்டால் விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறி அமைச்சர் பிரசாத் புறக்கணித்தார்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி.ராஜா நேற்று கூறுகையில்,‘‘பாரத மாதா யார் என்பது குறித்து கேரள ஆளுநர் விளக்க வேண்டும். பாரத மாதா அல்லது மூவர்ண கொடிக்கு முழு சொந்தக்காரர்கள் தாங்கள் தான் என பாஜவினர் நினைக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லை. சுதந்திரத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் பெரும் பங்காற்றியுள்ளது. தேச பக்தி குறித்து ஆர்எஸ்எஸ்சிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது இல்லை’’ என்றார்.