*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகர்கோவில் : அண்ணா பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளன. இதை சரிசெய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் குற்றசம்பவங்களை குறைக்கும் வகையில் எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் போதை பொருட்கள் விற்பவர்கள் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டம் முழுவதும் சமூகவிரோத செயல்கள் நடக்காமல் இருக்கும் வகையில் முக்கியமான சந்திப்பு பகுதியில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் மாநகர பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.
வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை புறக்காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் பெரிய டிவி வைக்கப்பட்டுள்ளது.
முக்கியமான பண்டிகை காலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ரோந்து கண்காணிப்பு கேமரா பொருத்திய வாகனங்கள் மூலம் போலீசார் கண்காணித்தும் வருகின்றனர். வடசேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அங்கு நடக்கும் சம்பவங்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் குற்றசம்பவங்கள் நடக்கும்போது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவல்துறைக்கு பல்வேறு விதங்களில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் உதவியாக இருந்து வருகிறது.
அண்ணா பஸ் நிலையத்தில் மாவட்டத்திற்குள் இயக்கப்படும் நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் காலை முதல் இரவு வரை பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக காலை, மாலை வேளையில் கடும் நெருக்கடியாக இருக்கும்.
இந்த சமயத்தில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றசம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அண்ணா பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஒரு சில கேமராக்கள் இயங்காமல் உள்ளன.
இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை புறக்காவல் நிலையத்தில் இருந்து பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெரிய டிவியும் இயங்காமல் உள்ளது. எனவே இதனை உடனே சரிசெய்து புறக்காவல் நிலையத்தில் போலீசார் எப்போதும் இருக்கும் வகையில் நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எஸ்பிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.