புதுடெல்லி: டெல்லியில் நடந்த பிஎன்இஎப் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘பொதுமக்கள் தற்போது மின்சார மற்றும் சிஎன்ஜி வாகனங்களை அவர்களாகவே விரும்பி வாங்குகிறார்கள். இதனால் மின்சார வாகனங்களுக்கு இனியும் அரசு மானியம் வழங்க வேண்டுமென நான் நினைக்கவில்லை. இதுதவிர, பெட்ரோல், டீசல் வாகனங்களை விட மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டியும் குறைவாக உள்ளது. என்னை பொறுத்த வரையில், மின்சார வாகனங்கள் உற்பத்தியாளர்களுக்கு இனியும் அரசு மானியம் வழங்க வேண்டிய அவசியமில்லை.
மானியம் கேட்பதும் நியாயமல்ல. லித்தியம் அயன் பேட்டரியின் விலை மேலும் குறையும் போதும் மின்சார வாகனங்களின் விலையும் குறையும். இன்னும் 2 ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களும், மின்சார வாகனங்களும் ஒரே மாதிரியான விலையில் இருக்கும்’’ என்றார். தற்போது மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.