சென்னை: ‘‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான புகார் மீது 2 மாதங்களில் ஆரம்பகட்ட விசாரணை முடித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த அரவிந்தக்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன் (தி.நகர் சத்யா)சென்னை தி.நகர் தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என்று கூறியிருந்தார். சட்டத்துக்கு புறம்பாக தனது சொத்துகளை மறைத்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை வெளியிடுமாறு கேட்டபோது அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என்று தகவல் அளிக்கப்பட்டது.எனவே சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ள தி.நகர் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புகார் மீது 2 மாதங்களில் ஆரம்பகட்ட விசாரணை முடித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று லஞ்ச ஒழிப்புத்துறை க்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.