Wednesday, April 17, 2024
Home » வேட்பு மனு தாக்கலின்போது டிடிவி.தினகரன் வந்த வேனை இன்ஸ்பெக்டர் மீது ஏற்ற முயற்சி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வேட்பு மனு தாக்கலின்போது டிடிவி.தினகரன் வந்த வேனை இன்ஸ்பெக்டர் மீது ஏற்ற முயற்சி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

by Karthik Yash

தேனி: கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த டிடிவி.தினகரனின் வேனை தணிக்கை செய்ய முயன்ற இன்ஸ்பெக்டர் மீது மோதுவது போல சென்று விட்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ கூட்டணியில் அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக, நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு டிடிவி.தினகரன் பிரசார வேனில், தொண்டர்களின் கார்கள் புடை சூழ வந்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர்.

ஆனால், டிடிவி.தினகரன் வந்த வேனுக்குள் 4 பேருக்கும் அதிகமான நிர்வாகிகள், மற்றும் வேனின் இருபுறமும் தொண்டர்கள் கட்சிக்கொடியுடன் இருப்பதை கண்ட போலீசார் அவர்களை கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், இதனை ஏற்க மறுத்த நிலையில், டிடிவி.தினகரனின் பிரசார வேன் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வேனின் முன்பக்கம் வந்து வேனை நிறுத்தும்படி கூறியுள்ளார். அப்போது, இன்ஸ்பெக்டர் உதயகுமாரை பணி செய்ய விடாதபடி, வேன் திடீரென வேகமாக கிளம்பியது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர் செய்வதறியாது, வேனை பிடித்தபடி பின்னாலேயே சிறிது தூரம் நடந்தார். இருந்தபோதும், வேனை நிறுத்தாமல் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மீது மோதுவது போல வேன் முன்னே சென்றது. இன்ஸ்பெக்டர் உதயகுமார் சற்று சுதாரித்து வேனின் வலதுபுறம் ஒதுங்கி வந்து, டிரைவரை கண்டித்துக் கொண்டிருக்கும்போதே, டிடிவி.தினகரன் வந்த வந்த வேன் நிற்காமல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேராக சென்றது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் விவேகானந்தன் கூறுகையில், ‘இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

* ‘ரூ.20 டோக்கன் பத்தி எதுவுமே தெரியாது’
வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுத்தார். இதில், என் பெயரில் சிலர் ரூ.20 விநியோகம் செய்துவிட்டு என் பெயரை களங்கப்படுத்தினர். அந்த ரூ.20 டோக்கன் குறித்து எதுவும் தெரியாது’’ என்றார். இதனையடுத்து, ‘‘1999ல் எம்பியாக இருந்தபோது, தேனி தொகுதியில் என்ன வளர்ச்சித் திட்டம் கொண்டு வந்தீர்கள்’’ என செய்தியாளர்கள் கேட்டபோது, ஜெயலலிதா செய்த திட்டங்கள் குறித்து கூறிய டிடிவி தினகரன், அவர் என்ன செய்தார் என்பதை கூறாமலேயே அங்கிருந்து கிளம்பினார்.

You may also like

Leave a Comment

three + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi