சென்னை: தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 6 பேர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்கள் ஒருமனதாக வெற்றிபெறும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து அந்த 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2ம் தேதி தொடங்கியது. நேற்று (9ம் தேதி) மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்தது. இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வரும் 12ம் தேதி (வியாழன்) மாலை வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போட்டியிருந்தால் வரும் 19ம்தேதி தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆகியோர் கடந்த 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல, கடந்த 6ம் தேதி பிற்பகல் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுதவிர 3 சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களுக்கும் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் தலா 10 பேர் முன்மொழிந்துள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேருக்கும் ஒரு எம்எல்ஏ கூட முன்மொழியவில்லை. அதனால், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறும்போது இந்த 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அரசியல் கட்சி வேட்பாளர்களின் 6 மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 12ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அன்றைய தினமே திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.