Saturday, April 13, 2024
Home » வேட்பு மனு அட்ராசிட்டி

வேட்பு மனு அட்ராசிட்டி

by Arun Kumar

* சவப்பெட்டியுடன்…

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூர்முகம்மது (64). இவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனுவை தாக்கல் செய்வதற்காக நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் சவப்பெட்டியுடன் வந்தார். போலீசார் அவரை 100 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தி காரில் இருந்த சவப்பெட்டியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர். தொடர்ந்து அவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பணத்திற்காக வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் ஜனநாயகத்திற்கு எதிரானது. நமது வாக்குரிமை செலுத்துவது முக்கிய பங்கு ஆகும். யாருக்கும் வாக்களிக்க பிடிக்கவில்லை என நினைப்பவர்கள் கூட வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் நோட்டாவை கொடுத்துள்ளனர். சுதந்திரத்திற்கு போராடியவர்கள் மண்ணில் புதைந்து விட்டனர். இப்போது பணம் வாங்கி ஓட்டு போடுகின்றனர். ஜனநாயகம் இறந்துவிட்டது. இதனால்தான் சவப்பெட்டியுடன் வந்து மனு அளித்துள்ளேன். இதுவரை நான் 41 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். தற்போது 42-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

* தூக்குக்கயிறுடன்…..

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. இதில் சுயேட்சை வேட்பாளராக சங்கரபாண்டியன் தூக்குக்கயிற்றில் பணத்தை சுற்றிலும் வைத்து, வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது தற்கொலை செய்வதற்கு சமம் என்பதை வலியுறுத்திடும் வகையில் தூக்குக்கயிறுடன் வந்ததாக சங்கரபாண்டியன் தெரிவித்தார்.

* 10 நாணயங்கள் மூட்டையுடன்…

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், பாலப்பட்டியைச் சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ் (43). அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனரான இவர், நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, கலெக்டர் உமாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் தேர்தல் டெபாசிட் கட்டணம் ரூ.25 ஆயிரத்துக்கு, ரூ.10 நாணயங்களை மூட்டையாகக் கட்டி எடுத்து வந்தார். இதை 10 அலுவலர்கள் சுமார் ஒரு மணி நேரம் ரூ.10 நாணயங்களை எண்ணி கணக்கிட்டு, ரூ.25 ஆயிரம் இருப்பதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து காந்தியவாதி ரமேஷ் கூறுகையில், ‘ரூ.10 நாணயங்களை எங்கும் வாங்க மறுக்கின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ரூ.10 நாணயங்களை ரூ.25 ஆயிரத்துக்கு சேகரித்து, டெபாசிட்டாக செலுத்தியுள்ளேன். வாரணாசி தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன்,’என்றார். இவர் இதற்கு முன்பு நாமக்கல் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலிலும், வேலூர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு சட்டமன்ற இடை தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.

  • 239வது முறையாக தேர்தல் மன்னன்…

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் பத்மராஜன் (64). தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, 239வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக கின்னஸ் சாதனைக்காகவும், தேர்தல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது என்பதே என் எண்ணம். வெற்றி என்பது சிறிது நேரமே இருக்கும். தோல்வியை சுமந்து கொண்டே இருக்கலாம். எனது தேர்தல் தோல்விகளுக்காக, இதுவரை ரூ.1 கோடி வரை செலவிட்டுள்ளேன். கடந்த 36 ஆண்டுகளாக தேர்தல்களில் போட்டியிடுகிறேன்.இதுவரை நான் எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை. ஒருவேளை நான் ஜெயித்து விட்டால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியாது. உடனே ஹார்ட் அட்டாக் தான். இவ்வாறு பத்மராஜன் கூறினார்.

* வேட்பாளர் 1 வேட்பு மனு 2

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் நேற்று 2 மனுக்களை, கலெக்டரும், தேர்தல்நடத்தும் அலுவலருமான சுப்புலட்சுமியிடம் தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில்,வாழ்க்கை துணைவிகள்: ஆபிதாபானு, ஹாமிதா அலிகான். வங்கி இருப்பு: மன்சூர்அலிகான் ரூ.39 ஆயிரம், துணைவி-1, ரூ.25 ஆயிரம், துணைவி-2, ரூ.20 ஆயிரம். அசையா சொத்து: மன்சூர் அலிகானுக்கு 10 லட்சம் மதிப்பிலான 7,200 சதுரஅடி நிலம். துணைவி 1, ரூ.2 கோடி மதிப்புள்ள இடம். துணைவி 2, ரூ.75லட்சம் மதிப்புள்ள இடம். தொழில்: நடிப்பு மற்றும் திரைப்பட தயாரிப்பு.

கல்வி தகுதி: 10ம் வகுப்பு இடைநிற்றல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனுவின்போது நிராகரிக்கப்பட்டால் புதிதாக மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால் மாற்று வேட்பாளர் ஒருவரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைப்பார்கள். ஆனால் மன்சூர் அலிகானுக்கு மாற்று வேட்பாளர் இல்லாததால், அவரே 2 வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளார். ஒரு வேட்பாளர் 3 மனுக்களை வரை தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தள்ளுவண்டியில கூட இருக்கு… ஆனா… தேர்தல் ஆணையம் டிஜிட்டல் இந்தியாவுக்கு வரல.: கேஷ் கொடுக்க மறுத்த சுயேட்சை அடம்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக திருச்சி உறையூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் ராஜேந்திரன்(65) என்பவர் கிரடிட், பான், ரேஷன், ஆதார், டெபிட் கார்டுகளை கழுத்தில் மாலைபோல் மாட்டிக்கொண்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரதீப்குமாரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது வைப்பு தொகையாக செலுத்த வேண்டிய ரூ.25 ஆயிரத்தை தன்னுடைய கடன் வங்கி அட்டை மூலம் தான் செலுத்துவேன் என்று தேர்தல் அலுவலரிடம் அடம்பிடித்தார். வேட்பு மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அலுவலர், டெபாசிட் தொகையை பணமாக செலுத்த அறிவுறுத்தினார்.

டெபாசிட் தொகை கட்டாமல் வெளியே வந்த ராஜேந்திரன் கூறுகையில், ‘இந்தியா டிஜிட்டல் மயமாகி வருகிறது என்று கூறிக்கொள்ளும் ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்தில் மட்டும் ஏன் டிஜிட்டல் முறையை கடைபிடிக்கவில்லை. சாதாரண தள்ளுவண்டி கடையில் ஆரம்பித்து பெரிய கடைகள் வரை டிஜிட்டல் முறையை கையாளும் நிலையில், வேட்பாளர் விண்ணப்பத்திற்கு பெறப்படும் டெபாசிட் தொகையை ஏன் டிஜிட்டல் மூலம் பெறக்கூடாது. நான் என்னுடைய வங்கி கடன் அட்டை மூலம் பணம் செலுத்துவதற்கு தயாராக இருந்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தவில்லை. தேர்தல் ஆணையம் டெபாசிட் தொகையை வேட்பாளர்களிடமிருந்து கியூஆர் கோடு மூலம் பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi