Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

ஒலி மாசு புகார் எதிரொலி குலசேகரத்தில் 12 கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்

குலசேகரம் : குலசேகரம் சுற்று வட்டார பகுதிகளில் விழா காலங்கள், பொது நிகழ்ச்சிகளில் அதிக ஒலி எழுப்பும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சவுண்ட் சர்வீஸ் நடத்துபவர்கள் தங்கள் தொழில் போட்டியின் காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை திருப்தி படுத்தும் வகையில் இந்த ஒலிபெருக்கிகளை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதியில் இருந்து பல கிமீ தூரம் வரை யாருக்கும் தெரியாத வண்ணம் மரங்களின் உச்சியில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை கட்டி வைக்கின்றனர். அரசு மற்றும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த ஒலிப்பெருக்கிகள் பயன்பாட்டால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

சிறிய குக்கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக நீண்ட தூரத்தில் இருக்கும், மக்கள் அதிகம் புழங்கும் குலசேகரம் பகுதி வரை இத்தகைய ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்படுகிறது.

தேர்வு நேரங்களில் இது பெரும் பாதிப்பை உருவாக்குகிறது. மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் நிறைந்த முக்கியத்துவம் வாய்ந்த குலசேகரம் பகுதிக்கு வரும் மக்களுக்கு இது பெரும் இடையூறாக அமைகிறது.

இதனால் ஒலி மாசுபாடு ஏற்படுவதுடன் நோயாளிகள், பள்ளிக் கல்லூரி மாணவ மாணவியர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்ளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்தநிலையில் நேற்று முன்தினம் குலசேகரம் போலீசார் அரமன்னம் பகுதி வழியாக ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு நிகழ்ச்சிக்கு தயாராக கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட போலீசார் அங்கிருந்த 12 கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக அதன் உரிமையாளர் இளங்கோ (41) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.