சென்னை: அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக் கொள்ளும் நம் உறவுகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ெநகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் இதுவரை 8 நிறுவனங்களுடன் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 1300 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு: அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக் கொள்ளும் நம் உறவுகள்! தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.