Thursday, September 19, 2024
Home » மூளையின் முடிச்சுகள்

மூளையின் முடிச்சுகள்

by Nithya

நன்றி குங்குமம் தோழி

ஆண்களின் வெறுமையும் உணர்வுகளும்!

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

“ஆம்பிளையை நம்பவே கூடாது, ஆம்பிளைனாலே திமிர் பிடிச்சவன், ஆம்பளை எப்பவும் கல்லாகவே இருப்பான், கொஞ்சங்கூட சென்டிமென்ட் இல்லாமல் பேசுறான் பாரு” என்று ஆண்களைப் பற்றிய உரையாடல்களில், ஆண்களின் நடவடிக்கைகள் குறித்து, நம் சமூகத்தில் உள்ளவர்களால் மேலே குறிப்பிட்டவாறு தொடர்ந்து பேசப்படுகிறது. உலகளவில் ஆண் வழிச் சமூகம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது என்றும், அதன் காரணமாய் பெண்களுக்கான வாய்ப்புகளும், உரிமைகளும் மறுக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு, #Metoo இயக்கம் உலகளவில் தொடங்கிய போது, ஆண்களின் மனநிலையை குறிக்கும் சொல் ஒன்று பிரபலமானது. அதுதான் ‘நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மை’ (Toxic Masculinity). இந்த வார்த்தை ஒட்டு மொத்த ஆண்களின் மனநிலையை அவமதிக்கும் சொல்லாகவே மாறியது. இந்தச் சொல்லாடல், உண்மையில் நம் வீட்டில் இருக்கும் அப்பா, அண்ணன், தம்பி, மாமா என்று பலதரப்பட்ட விதங்களில் உறுதுணையாக இருக்கும் ஆண்களின் மனநிலையை என்ன மாதிரி கவலை கொள்ளச் செய்யும் என்பதுதான், உளவியல் நிபுணர்களின் ஆதங்கமாக இருந்தது.

நம்முடைய தினசரி வாழ்க்கையில், நமக்கு ஏற்படும் உணர்ச்சி மாற்றம் தான் Mood Swing என்று உளவியலாளர்கள் சொல்கின்றனர். உண்மையில் மூட் ஸ்விங்ஸ் பற்றி பேசும் போது, அது பெண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண், பெண் இருவருக்குமே இது பொதுவானது. அவரவர் சூழல், வேலை, காதல் வாழ்க்கை, பொருளாதாரம் சார்ந்து இயல்பாகவே மனநிலையில் சந்தோஷம் மற்றும் கவலை உணர்ச்சிகள் மாறிமாறி தோன்றிக் கொண்டேதான் இருக்கும் என்கின்றனர். ஆனால், ஆண்கள் குறித்த பொதுக் கருத்தின் தொடர்ச்சியாய், அவர்களின் மனநிலை பற்றி பெரிதாக யாரும் இங்கு அலட்டிக் கொள்வதில்லை.

உதாரணத்திற்கு, ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திலேயே திடீரென்று காரணமே இல்லாமல் மிகவும் எரிச்சலுடனும் கோபத்துடனும் காணப்படுகிறார் என்றால் அதுவே Mood Swing என வரையறுக்கிறார்கள். அதாவது, மிகச்சிறிய கால இடைவெளியில் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்களே Mood Swing எனச் சொல்லப்படுகிறது.

ஆண்கள் அழக்கூடாது. உணர்ச்சிவசப்படக் கூடாது எனப் பல காலமாக சமூகத்தால் கற்பிக்கப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி, சோகம், கோபம் மற்றும் அனைத்து உணர்ச்சிகளையும் பெண்களைப் போல ஆண்களும் உணர்கின்றனர். ஆனால் நமது சமூகமோ, ஆண்கள் பெரும்பாலும் உணர்வுகளை உணர்வதும் இல்லை அதை வெளிப்படுத்துவதும் இல்லை என்ற பொதுக் கருத்துடனே பேசிக் கொண்டிருக்கிறது. பெண்களின் மனம் கடலைவிட ஆழம் என்றால், ஆண்களின் மனமும் அதற்கு நிகரானது. சொல்லப் போனால் அதைவிட ஆழமானது எனலாம். ஆண்களை விட பெண்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டவர்கள் என்றாலும், ஆண்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது என்பது ஒரு கட்டுக்கதையே தவிர வேறொன்றுமில்லை.

உண்மை என்னவென்றால், பெண்ணைப் போலவே, ஆணும் உணர்வுகளின் ஏற்றத்தாழ்வுகளை அனுபவிக்கின்றான் என்பதே உளவியல் உண்மை. ஆண்கள் எப்பொழுதும் வலுவாகவும் உறுதியான மனநிலையுடன் இருக்க வேண்டும் என்கின்ற சொல்லாடல் ஒரு ஆணுக்கு உத்வேகத்திற்கு பயனளிக்கும். ஆனால் பிரச்னை ஏற்படும்பொழுது அதனை சமாளிப்பதில் சிக்கல்கள் உருவாகும். ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை கையாள, பிறரிடம் உதவி கேட்பதில் எந்தவித தயக்கமும் இருக்கக் கூடாது. தயங்கினால் ஆணுக்கும் பயம், பதற்றம் போன்ற உணர்வுகள் வெளிப்படலாம். ஆண்களுக்கும் கவலை மற்றும் துன்பம் அதிகரிக்கும் பொழுது தாராளமாக அழலாம். இதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

பாலின சமத்துவம் பேசும் பெண்கள் கூட தன்னை அன்புடனும் பாசத்துடனும் அரவணைக்க வேண்டும், தன்னை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என ஆண்களிடம் எதிர்பார்க்கின்றனர். ஆண்கள் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பொழுது அவர்களுக்கு அன்பும், அரவணைப்பும் கொடுக்க வேண்டும் என்பதைப் பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுவது போல், ஆண்களுக்கும் மெனோபாஸ் காலம் இருக்கிறது. மன அழுத்தம் மற்றும் வயது மூப்பின் காரணமாக ஆண்களின் மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது. கார்டிசோல்(அழுத்த ஹார்மோன்), ஈஸ்ட்ரோஜன்(பெண் பாலின ஹார்மோன்) அளவு அதிகரிப்பு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (ஆண் பாலின ஹார்மோன்) அளவுகள் குறைவதால் 40 முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அடிக்கடி மனநிலை மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள்.

டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவு, ஆண்ட்ரோபாஸ் அல்லது ஆண் மெனோபாஸ் எனப்படும் வயது மூப்புடன் தொடர்புடையது. இதைத்தான், ஆண்மை மற்றும் சமூக நீதிக்கான ஈக்விமுண்டோ மையத்தின் (Equimundo Center for Masculinities and Social Justice) தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை-நிறுவனர் ‘மென்கேர்’ மற்றும் ‘மென் என்கேஜ்’ ஆகிய நிறுவனங்களின் இணை-நிறுவனராய் இருக்கும் கேரி பார்க்கர் மூலம் மற்றொரு வார்த்தையும் உருவானது.

அதாவது, ஆரோக்கியமான ஆண்மை (Healthy Masculinity) அல்லது நேர்மறை ஆண்மை (Positive Masculinity). சமூகமும், குடும்பமும், அலுவலகங்களும் ஆண்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றும், ஆண்களும் பெண்களும் கலந்து வாழும் இந்த சமூகத்தில் ஆண்களின் மனநலமும் மிகவும் முக்கியமானது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

நச்சுத் தன்மை வாய்ந்த ஆண்மையுள்ள ஆண்கள் இருக்கிறார்கள் என்றாலும், நேர்மறை ஆண்மையுள்ள ஆண்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை. நம் பூமியில் நல்லது, கெட்டது என்பது அனைத்து பாலினத்திலும் இருக்கிறது. அதனால் ஆண்களின் மனநிலையில் உள்ள வெறுமையையும், அழுத்தங்களையும் சரி செய்ய நாம் அனைவரும் உறுதுணையாக ஆண்களுக்கு இருக்க வேண்டுமென்பதே இன்றைய காலத்தின் கடமையென நாம் அனைவரும் கருத வேண்டும்.

You may also like

Leave a Comment

20 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi