நன்றி குங்குமம் தோழி
நம் எண்ணங்களுக்கு நாமே துணை!
காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்
‘நீ எனக்கான தீர்ப்பை எழுதும் முன், என் காலணியில் நடந்து செல்’ என்ற பழமொழி ஒன்று இருக்கிறது. இன்றைக்கு அனைவருக்குமே ஒவ்வொரு சூழலிலும், ஒருவிதமான நம்பிக்கையும், நியாயமும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால்தான், ஒட்டு மொத்தமாக மனிதன் தன்னிடமுள்ள நியாயத்தைப் பற்றியே பேச முயற்சிக்கிறான். இந்த உலகிலுள்ள கோடிக்கணக்கான மக்களின் கால் ஷூவில் இருந்து பேச ஆரம்பித்தோமானால், யாரும் யாருக்கும் சரியான விஷயங்களை கொடுக்க முடியாது.
ஏனென்றால் நம்மைப் போல் பலரும் சேர்ந்து வாழும் ஒரு உலகில் இருக்கும் போது, சில நேரங்களில் பொதுவான தர்க்கமும், பொதுவான நியாயமும் கண்டிப்பாக இந்த சமூகத்திற்கு தேவைப்படுகிறது. இதனால் அவர்களுடைய வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் ஒரு சிறு சம்பவம் நடந்தாலும், தங்களுடைய எண்ணங்களையும், சிந்தனைகளையும் வேறு பார்வையில் யோசிக்கத் தவறுகிறார்கள்.
உதாரணமாக; நீங்கள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது, உங்களது பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் சொல்கிறீர்கள். ஆனால் அவர், ஏதோ ஒரு அவசரத்தில் அதை கண்டுகொள்ளாமல் செல்கிறார். அப்பொழுது இந்த சூழ்நிலையில், தன்னைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லும் அளவிற்கு கூட நான் தகுதியானவன் இல்லையா அல்லது நான் அவருக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லையே, ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார் போன்ற தேவையற்ற கவலையை ஏற்படுத்தும் எண்ணங்களும், சிந்தனைகளும் நமக்குள் பலவிதமாக ஏற்பட ஆரம்பிக்கும்.
அல்லது தனக்கு வணக்கம் சொல்லாமல் செல்லும் அவரை பழிவாங்கவேண்டும் என்ற கோபமும் ஏற்படலாம். ஆனால் இவ்வாறு சிந்தித்துப் பாருங்களேன், நீங்கள் சொல்லிய வணக்கத்தை அவர் கவனிக்கவில்லை என்றோ அல்லது வேலையின் அவசரம் காரணமாக, அவர் கண்டுகொள்ளாமல் சென்று இருக்கலாம் அல்லது அவரை அடுத்தமுறை பார்க்கும் போது இதற்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்பது போல நீங்கள் நேர்மறையாகவும் சிந்திக்கலாம். அல்லது அந்த நபர் உங்களிடம் எவ்வாறு பழகுவார் என்பதை நீங்கள் கடந்த கால நிகழ்வுகளின் மூலம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
மேலே சொன்ன உதாரணமோ மிகவும் சாதாரணமான சம்பவம்தான் என்று அனைவருக்கும் தோன்றும். ஆனால், அதன் பின்னால் இருக்கும் சிந்தனையின் தாக்கமோ அதிகம் என்பதுதான் இங்கு பிரச்னையாக இருக்கிறது. இன்றைய சூழலில் பலரும் சொல்வதுதான், எதை நினைத்து பயப்படுகிறேனோ அல்லது கவலைப்படுகிறேனோ அது உடனே நடந்து விடும் என்று நம்பும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏன் அப்படி நடக்கிறது என்பதின் உண்மையான அர்த்தம் பலருக்கும் சரியாக புரிந்து கொள்ள முடியாததன்
ஒரு அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால், யுவால் நோவா ஹராரி என்ற எழுத்தாளர் எழுதிய ஹோமோசேபியன்ஸ் புத்தகத்தில் ஒரு இடத்தில் கூறியிருப்பார். அதாவது காலம் காலமாக ஒரு மனிதனால் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவிலுள்ள மனிதர்களுடன் தான் பழக முடியும் என்கிறார். அதாவது அந்த குறிப்பிட்ட மனிதர்களுக்கு தங்களுடைய நேரம் கொடுத்து, பணம் கொடுத்து, உணர்வுகளுடன் பேச உரிமை கொடுத்து பழக முடியும் என்கிறார்.
ஏனென்றால், அவர்களுக்குரிய நிலம், அங்குள்ள பழக்க வழக்கம், அங்குள்ள மனிதர்களுடனான உறவு, அவர்களுக்குள் இருக்கும் உறவு சார்ந்த நம்பிக்கை, நெருக்கம் அனைத்துமே காலம் காலமாக அங்குள்ள முன்னோர்கள் அவர்களுக்கு தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொடுத்து இருப்பார்கள். அதனால் அங்கு நாம் போய், பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு வணக்கம் சொன்னோமானால், உடனே பதில் வணக்கம் கிடைத்திருக்கலாம்.
ஆனால் இன்றைக்கோ நகர மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் உலகம் என்று நகர்ந்து கொண்டிருக்கும் போது, பலதரப்பட்ட மனிதர்களுடன் பேசவும், அளவுக்கு அதிக என்ணிக்கையிலான நபர்களுடன் உரையாடவும் வாய்ப்புகளும், சூழலும் இருக்கும் போது, மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடிக்கப் பழகிக் கொண்டு வருகிறார்கள். இத்தனை வேறுபட்ட சூழல், அளவுக்கு அதிகமான மனிதர்களுடன் உரையாடல் என்பது, மனிதர்களுக்கு ஒவ்வாத மற்றும் எளிமையாக செய்ய முடியாத செயலாக இருக்கிறது. அதனால் மிகவும் போராடி, போராடி ஒவ்வொரு மனிதர்களின் செயலைப் புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறான்.
உதாரணத்திற்கு, மிக எளிதாக சொல்லப் போனோமானால், மனிதன் தனக்குப் பிடித்த மாதிரி ரசித்து சாப்பாட்டைக்கூட சரிவர சாப்பிட முடியவில்லை என்கிறார்கள். இதில் மேலும் அவனுக்கு பொருளாதார நெருக்கடி, திருமண உறவு சார்ந்த பிரச்னைகள் என்று அனைத்தும் வரும் போது, மனிதன் உடளவிலும், மனதளவிலும் மிகவும் சோர்ந்து போகிறான். அதனால் நாம் மிகவும் இயல்பாக பேச முயற்சி செய்தாலும், பலரால் அந்த இயல்பான வாழ்க்கைக்குள் வர முடியாமல் இருக்கிறார்கள். அல்லது மிகப்பெரிய பாதிப்பை சக மனிதர்களிடமிருந்து உணர்ந்து இருப்பார்கள். இதனால், இயல்பாக பேச முயற்சி செய்பவரும் மிகவும் மென்மையான மனம் உடையவராக இருக்கும்போது, அவரும் பலவித குழப்பங்களுக்கு உள்ளாகிறார்.
அதனால்தான், மனித எண்ணங்களுக்குள் அடிக்கடி ஏதேனும் தவறு நிகழ்ந்துவிடுமோ என்ற எதிர்மறை எண்ணம் ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். தவறு நிகழ்ந்து விடுமோ என்ற எதிர்மறை எண்ணம் உங்கள் சிந்தனைக்குச் சென்று, வேலையில் தவறு நடந்துவிடுமோ? குடும்ப உறவுகளில் பிரச்னை ஏற்படும் அளவிற்கு எதுவும் தவறாக பேசி விடுவோமோ? இதனால் வாழ்க்கையில் எதாவது பெரிய தவறு ஏற்பட்டு விடுமோ போன்ற சிந்தனைகள் வெளிப்பட்டு, உங்களது உணர்வு நிலையில் கவலை,பயம் அல்லது பதற்ற உணர்வு அதிகமாக வெளிப்படும், பயம் மற்றும் பதட்டத்துடன் செயல்படும் போதும், பேசும் போதும் கண்டிப்பாக தவறுகள் நிகழ்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதைத்தான் பதறிய காரியம் சிதறும் என்றும் கூறுகிறார்கள்.
அதனால் நீங்கள் உங்கள் மனதுக்குள் மிக இயல்பாக செய்யும் விஷயங்களை எல்லாம், செய்த பின்னாடி, அதற்கு வரும் எதிர்வினைகள் பற்றி பெரிதாக யோசிக்காமல், அடுத்தவர்களுடைய பார்வையில் நின்றும் யோசிக்கும் போதும், மனம் விட்டு பேசும் போதும் உங்களுடைய வாழ்வில் நடக்கும் சிறு சிறு சம்பவங்கள் அனைத்துமே மிக இயல்பாக, உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை என்றைக்கும் மறந்துவிட வேண்டாம்.