டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானம் எனக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றி வருகிறார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் பதிலுரையாற்றி வருகிறார்.
மோடி உரையை கவனிக்கும் ராகுல் காந்தி:
மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவையில் உள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் எனக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது: மோடி
நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கருத்தையும் கேட்டறிந்தேன். எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எனக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்னரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நான் எதிர்பார்த்தேன் என்றார்.
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்:
மக்கள் எங்கள் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர். மக்களவையில் 3 நாட்களாக விவாதங்களை கவனித்து வருகிறேன். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசீர்வாதமாக கருதுகிறேன். நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்:
கடந்த தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கையில்லை என்று அறிவித்துவிட்டனர். 2024 தேர்தலில் பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும். 2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று மோடி உறுதிபட கூறினார்.
பாஜக ஆட்சியில் முக்கிய பல மசோதாக்கள் நிறைவேற்றம்:
பாஜக ஆட்சியில் முக்கிய பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கிய மசோதாக்களை கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இந்திய நாட்டின் இளைஞர்களைப் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை. வாக்களித்த மக்களுக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் செய்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
நாட்டின் நலன் மீது எதிர்கட்சிக்கு அக்கறை இல்லை:
கட்சி நலனையே எதிர்க்கட்சிகள் பெரிதாக கருதுகின்றன; நாட்டின் நலன் மீது அக்கறை இல்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் கட்சிகளின் கூட்டணிதான் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன என்றார்.
நோ பாலாக வீசும் எதிர்க்கட்சிகள்; சதமடிக்கும் ஆளுங்கட்சி:
அரசியலில் எதிர்க்கட்சிகள் பீல்டிங்கில் இருக்கின்றன; ஆளும் கட்சி சிக்சர்களாக அடிக்கின்றது. எதிர்க்கட்சிகள் நோ பாலாக வீசுகின்றன; ஆளுங்கட்சி சதம் அடித்துக் கொண்டிருக்கின்றது. நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி பேசுபவர்களின் பட்டியலில் ராகுல் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இன்னும் தங்களை நன்றாக தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள 5 ஆண்டுகளை அழித்திருக்கின்றன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச காங். வாய்ப்பளிக்கவில்லை:
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுவதற்கு காங்கிரஸ் வாய்ப்பு தரவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். எல்லா நேரமும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை அவமானப்படுத்துவதே காங்கிரஸின் வேலையாக உள்ளது என்றார்.