நன்றி குங்குமம் தோழி
ஒரேயிடத்து உறவுகள்!
காலங்கள் மாறினாலும், கலாச்சாரங்களில் மாற்றம் ஏற்பட்டாலும், காணும் பொருட்கள் விதவிதமாக மாறினாலும் நம் உறவுமுறைகள் மட்டும் என்றுமே மாறாது. உறவு முறைகளை சொல்லி அழைப்பதில், காலத்திற்கேற்ற மாற்றங்கள் வேண்டுமானால் மாறலாம். ஆங்கில உறவு முறையை சொல்லும் பொழுது சில உறவுகள் மாறுபடுவது போல் தோன்றும். ஆனால் பாசமும் பந்தமும் உணர்வுகளை மாற்றாதது.
நம் மூதாதையர் காலத்தில் உறவினர்கள் அனைவருமே பெரிய பெரிய வீடுகளில் வசித்தார்கள். அதனால் தெருமுழுவதும் பல வீடுகளில் நம் உறவினர்கள் இருந்தார்கள். அத்தை ஒரு இடத்தில் இருந்தால், மற்றொரு தெருவில் சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவினர்கள் வசித்தார்கள். மாமா போன்ற தாய்வழி உறவினர் வேறு தெருவில் வசித்தார்கள். ஒரே வீட்டில் அப்பா-அம்மா, பிள்ளைகள், தாத்தா-பாட்டி என அதுவே குறைந்தபட்சம் பத்து நபர்கள் கொண்ட குடும்பமாக அமைந்து விடும்.
எந்தக் குடும்பத்திலும் தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள் இல்லாமல் காணப்பட்டது. குடும்ப அமைதியும் சந்தோஷமும் குறைவில்லாமல் கிடைத்தது. ‘வீடு’ என்றால் எவ்வளவு ‘கிரவுண்டு’ என்றுதான் கேட்பார்கள். சிறிய நிகழ்வுகள் யார் வீட்டில் நடந்தாலும் அனைவரும் ஒன்று கூடி விடுவார்கள். புதிய பொருட்கள் வாங்கினாலோ, வீட்டிற்குப் புதிதாக ஒருவர் வந்து சென்றாலோ, அனைத்து வீடுகளுக்கும் விஷயம் கிடைத்து விடும். இத்தனைக்கும் கைப்பேசி இல்லாத காலகட்டம். பிள்ளைகள்தான் ‘அகில இந்திய வானொலி’ போன்று செய்திகளை பரப்புவார்கள். விளையாட ஒன்று கூடும் சமயம், வீட்டு விஷயங்களும் விவாதிக்கப்படும். அப்பொழுது ஒளிவு-மறைவு இல்லாமல் அனைத்தும் வெளிப்படும்.
காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட, கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளின் நெருக்கம் குறைய ஆரம்பித்தது. பிள்ளைகள் வெளியூரில் படிக்க மற்றும் வேலைக்கு சென்றது அவர்களின் மாற்றத்திற்குக் காரணமானது. பிள்ளைகள் வெளியூர் செல்வதால், வயதான தாய்-தந்தைகள் தனித்து வசிக்க இயலாத காரணத்தால் ஊரிலுள்ள வீடுகளை விற்று பிள்ளைகள் இருப்பிடத்திற்கு குடியேற ஆரம்பித்தனர். மாற்றங்களை விரும்பாதவர்கள் வீடுகளையே தனித்தனி குடுத்தனங்கள் இருக்கும்படி அமைக்கத் துவங்கினார்கள்.
அண்ணன், தம்பிகள் ஆளுக்கு ஒரு ‘போர்ஷனில்’ வசிக்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் ஒவ்வொருவர் குடும்பத்திலும் தனிப்பட்ட நிம்மதியும், மற்றவர் தலையீடும் இல்லாமல் இருப்பதாக நினைத்தார்கள். ஒரே வீட்டில் உடன் பிறந்தவர்கள் இருந்ததால், வெளியூர் சென்றாலோ, உல்லாச யாத்திரை ஏற்பாடு செய்தாலோ ஒன்றாக வண்டியில் சந்தோஷமாக குடும்பத்துடன் பயணித்தார்கள். ஒரு வீட்டில் பெண்மணிக்கு உடல் நிலை சரியில்லை என்றால், மற்றொரு வீட்டிலிருந்து அவர்களுக்கு சாப்பாடு வந்துவிடும். பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தால், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பதார்த்தம் செய்து வருவார்கள்.
அத்தகைய உறவுகள் இருந்தன அன்று.நகர வாழ்க்கைக்கு மாறிய பிறகு தான் குடும்பங்கள் தனித்தனியாக சென்றுவிட்டன. தனி வீடுகள் அனைவராலும் கட்டிக் கொள்ள முடியாததால் ஒரு வீட்டை பல போர்ஷன்களாக பிரித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு புறம் வசிக்கத் தொடங்கினர். இதில் முக்கியமான விஷயம் உறவுகளுக்குள் ெசாத்தைப் பிரிப்பதிலும் இருந்தது. நான்கு உறவினர்களும் சேர்ந்து அனுமதித்தால்தான் சொத்தை விற்க முடியும்.
எப்படியோ இந்த காரணத்தினால் உறவினர்கள் பிரிந்து போகாமல் இருந்தார்கள். பெரியவர் வீட்டில் காரில் புனித க்ஷேத்திரங்களுக்கு செல்லும் போது, இளையவரின் குடும்பமும் உடன் செல்லும். அலுவலகம் சம்பந்தமாக வெளியில் போக நேரிட்டால் அவர்கள் பிள்ளைகள் ஏதாவது ஒரு வீட்டில் தஞ்சமடைந்து கொள்வார்கள். அப்பா, அம்மா வரும் வரை காபி-டிபன் சாப்பிட வீடுகள் இருந்தன. பாசம் காட்ட ரத்த பந்த உறவுகள் இருந்தன.
அனைவருக்கும் தெரிந்த நண்பர் வீட்டுக் கல்யாணம் என்றால் ஒன்றாக உல்லாசமாகச் செல்வார்கள். பெண்களுக்கு போரடித்தால் மற்றொரு வீட்டிற்குச் சென்று அரட்டையடிப்பார்கள். இது போன்ற தனித்தனியான கூடி வாழும் குடும்பங்களில் உறவும் விட்டு விடாமல், பாச பந்தமும் அறுகாமல் இருந்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலையீடுகள் இல்லாமல் இருந்தது. இப்போது காலகட்டம் மாறிவிட்டதால் அனைத்திலும் மாற்றங்கள் காணப்படுகின்றன. சில சமயம் சொந்த அண்ணன், தம்பிகளே உறவினர் திருமணங்களில்தான் சந்தித்துக் கொள்கிறார்கள்.
பிள்ளைகளுக்கும் உறவுகள் பற்றி தெரிவதில்லை. யாருக்கும் பிறரின் அறிவுரைகள் தேவைப்படுவதில்லை. அநாவசியத் தலையீடுகளை தவிர்த்தால் தான் நமக்கு மரியாதை தேடிவரும் என்கிற நிலை. ஒரு சில குடும்பங்களில் கூட்டுக் குடும்பத்தைப் பார்த்த வெளிநாட்டினர் ஒருவர் ‘எப்படி ஒன்றாக வசிப்பதெல்லாம் சாத்தியமாகிறது? அவரவர்க்கென தனிப்பட்ட கருத்துக்கள் கிடையாதா?’ என்றார். நம் இந்திய கலாச்சாரமும், பாச பந்தமும் வளர்ந்த காலகட்டங்களை பார்த்திருந்தால், எப்படிச் சொல்வாரோ?
உறவுகள் நெருக்கம் குறைந்துவிட்டதே என்று ஆதங்கப்படும் நாம், பழைய நிலை திரும்புமா என்றுதான் புலம்பிக் கொண்டிருக்கிறோம். மேல் நாட்டு மோகமும், ஆடம்பரமும் நம்மை எத்தனையோ மாற்றினாலும், ஒருவர் விழ, மற்றவர் தாங்கிப் பிடிப்பது என்பது நம் மண்ணின் பெருமையல்லவா? நம் பாசபந்தத்தையும், உறவு முறைகளையும், ஒற்றுமையையும் பார்த்து வியந்த வெளிநாட்டினர் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றனர். நம் தமிழ் மண், பிறக்கும் முதல் இறக்கும் வரை நம்மைப் பாதுகாத்து உறவுகளுடன் குடும்பமாக வாழ கற்றுத் தந்து, நம்மைத் தாங்கவும் உறவுகளை ஏற்படுத்தி தந்து, எக்காலத்தும் தனித்து விடப்படாமல் காப்பாற்றி வருகிறது.
நாம் வசிப்பிடங்களை சதுர அடி கணக்கில்தான் அமைக்க முடிகிறது என்பதால் ஒரே குடும்பம் அவரவர் வசதிக்கேற்றபடி வீட்டை வாங்கிக் கொள்கின்றனர். எப்படியோ, அதிலும் குடும்பங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் இருப்பது நல்ல விஷயம் தானே! காலகட்டத்திற்கேற்றபடி நம் இருப்பிடங்களை மாற்றிக் கொள்கிறோமே தவிர, உறவுகள் எக்காரணம் கொண்டும் மாறுவதில்லை. ஒரு பெண்ணின் அம்மா தனியாக உதவியாளருடன் வசிக்கிறார்.
ஒருநாள் அவர் மயக்கமடைய, உதவியாளர் வேறு தளத்தில் வசிக்கும் மகளிடம் சென்று விஷயத்தைக் கூற, அவள் ஓடிவந்து ஆம்புலன்ஸில் அம்மாவை அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர்தான் தெரியவந்தது. அம்மாவுக்கு ஏற்பட்டது மாரடைப்பு என்று. நல்ல நேரத்தில் ரத்தபந்த உறவாக இருந்ததால், உயிர் பிழைக்க வைக்க முடிந்தது. இவற்றையெல்லாம் நம் முன்னோர்கள் முன்பே நன்கு ஆராய்ந்துதான் கூட்டுக் குடும்பம் என்பதை ஆதரித்தார்கள்.
இன்றைய காலகட்டத்திற்கு சரியாக இருக்காது என்று நினைத்தாலும் உறவுகள் ஒன்றாக ஓரிடத்தில் வசிப்பது என்பது பலவிதங்களில் பலனளிப்பதாகவே இருக்கிறது. ஆபத்துக் காலத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதும், இயலாத காரியங்களை பகிர்ந்து கொள்வதும், சிரமப்படும் போது பொருளோ, காசோ தந்து உதவுவதும் உறவுகளால் மட்டுமே சாத்தியம். ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே பிரச்னைகள் ஏற்பட்டால், வீட்டிலுள்ள பெரியவர்கள் எடுத்துச் சொல்லி அவர்களுக்குள் நல்ல ஒரு புரிதலை ஏற்படுத்தினார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் பிறர் தலையீடுகளை யாரும் விரும்புவதில்லை. தேவைப்படும் பொழுது, “நாம் இருக்கிறோம், கவலைப்பட வேண்டாம், எந்த உதவியும் செய்ய முடியும்” என்று மட்டும் கோடிட்டுக் காட்டினாலே போதும்! அவர்களுக்கு பாதி ‘டானிக்’ கிடைத்தது போல் ஆகிவிடும். யாருமே தனித்து இயங்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பழமையில் ஊறிய அனைவருமே உறவுகளுடன் கூடி இருப்பதையே மகிழ்ச்சியென நினைக்கின்றனர். இன்று உலகமே நம் கைக்குள் அடங்கிவிடுவதால் யார் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற நிலை காணப்படுகிறது. இது நம் பிள்ளைகள் காலம். சிறகடித்துப் பறப்பதுதான் அவர்களுக்கு பிடித்திருக்கிறது.
நம் மூதாதையர் நமக்கு விட்டுக் கொடுத்து வாழவும், தோல்வியில் விழாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் எத்தனையோ யுக்திகளை கதைகள் வாயிலாகவும், குடும்ப உறவுகளோடு சேர்ந்து வாழ்ந்த நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள். பெற்றோரின் இரு பிள்ளைகளும் வெளிநாடுகளில் வசிப்பதால், பெற்றோர்கள் தனியே வாழ்கிறார்கள். இது பிள்ளைகள் குற்றம் கிடையாது.
அவர்கள் திறமைக்கான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெரும்பாலான இந்திய குடும்பங்களில் காணப்படும் நிலை இதுதான். பிள்ளைகளும் உறவினர்கள் தாங்கிப்பிடிக்க இருக்கிறார்கள் என்ற தெம்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். முதியவர்களும் இளம் பிள்ளைகளுக்கு கவலை வேண்டாம் என்கிற தெம்பான வார்த்தைகளைத் தந்து உறவின் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் சொல்லி நம் பழைய நினைவலைகளை பரிமாறிக் கொள்வோம்.
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்