Thursday, March 20, 2025
Home » உன்னத உறவுகள்

உன்னத உறவுகள்

by Lavanya

கூடி மகிழும் உறவுகள்!

நன்றி குங்குமம் தோழி

ஐம்பது-அறுபது வருடங்களுக்கு முன்பு வரை வீட்டில் சிறிய சம்பவங்கள் நடந்தால் கூட, உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்தார்கள். வீடு நிறையவும் ஏழு-எட்டு பிள்ளைகள் இருந்தார்கள். இன்று வீட்டில் ஒரு பிள்ளை இருப்பதே பெரிதாக உள்ளது. அன்று குறைந்த வருமானம்தான் இருந்தது. ஆனாலும் நிம்மதிக்குக் குறைவில்லை. நிறைய சம்பாதிக்கும் இக்காலத்தில் நிம்மதி கிடைப்பதுதான் அரிதாகிவிட்டது.

நிம்மதி தருவதற்காகவே வீட்டுப் பொறுப்பை பெரியவர்கள் சமாளித்து அனைத்தையும் சுலபமாக்கினார்கள். பெரியவர்கள் வீட்டில் இல்லாத இக்காலத்தில் சிறிய விஷயங்கள் கூட நம்மை மன உளைச்சலுக்கு உட்படுத்தி பெரிய பூதாகரம் வெடிக்கும் அளவுக்கு செய்து விடுகிறது. மனம் திறந்து பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு உறவுகளின் நெருக்கம் கிடையாது. பெரியவர்கள், முதியவர்கள் என அனைவரும் சுறுசுறுப்புடன் இயங்கினார்கள்.

சுலபமாக எச்செயலையும் செய்தார்கள். இன்று அனைத்து வசதிகளும் வந்தபின் நம் மனதிற்கு மட்டும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. கல்வி மட்டுமே முன்னேற வழியினை காட்டுகிறது. அதிலும் மேன்மேலும் படித்து மெருகேற்றிக் கொண்டால்தான் முன்னேற முடிகிறது. இவ்வளவு சிரமங்களுக்கிடையில் நாம் எங்கே ஒன்று கூடி மகிழ முடியும் என்கிறார்கள் பிள்ளைகள். காசிக்குச் சென்றால் கூட அப்பொழுது குடும்பத்தினர் ஒன்று கூடி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.

ஒருவர் யாத்திரை செல்ல விரும்பினால் குடும்ப உறவினர்கள் அவர்களுக்கு நேரம் காலம் பார்த்துச் சொல்லி, ஒன்றாகக் கூடி கலந்துப் ேபசி, அவர்களுக்குத் தேவையான பொருட்களை பெற்றுத் தருவார்கள். மூத்தவர்கள் மற்றும் அனுபவப்பட்டவர்கள் எங்கெங்கே செல்ல வேண்டும், என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பது முதல் சாப்பாடு வரை சொல்லி அனுப்புவார்கள். போவதற்கு முன் வீட்டில் ஒன்று கூடி, விருந்து உபசாரங்கள் நடைபெறும். வந்த பின் சந்திக்கும் வைபவம் நடக்கும்.

ஒரு வீட்டில் பெண் தாய்மையடைந்துவிட்டாள் என்று தெரிந்தால் போதும். அவளுக்குக் குழந்தை பிறக்கும் வரை தினந்தோறும் உறவினர் வருகைதான். ஒவ்வொருவரும் பெண்ணுக்குப் பிடித்த பலகாரங்கள் செய்து எடுத்துக் கொண்டு வருவர். வீட்டில் எப்பொழுதும் விதவிதமான உணவுப் பண்டங்கள் அனைவருக்கும் கிடைத்து விடும். அக்கம் பக்கத்தில் உள்ளவர் கூட தங்கள் வீடுகளில் ஏதேனும் விருந்து சமைத்தால், தாயாகப் போகும் பெண்ணிற்குக் கொண்டு தருவார்கள். உறவினர்கள் பெருமையுடன் தாங்கிப் பிடிப்பார்கள். பின் வளைகாப்பு, சீமந்தம் என்று அனைவரும் ஒன்று கூடுவார்கள். ஒரு குட்டிக் கல்யாணமே நடந்து விடும். பண்டிகைகள் மட்டுமல்லாது, இது போன்ற விசேஷங்கள் நம்மை ஒன்று கூட வைத்து பாசப்பிணைப்பை திக்கு முக்காடச் செய்யும்.

இன்றைய நிலை உறவினர்களுக்கு இடையே போக்குவரத்து குறைந்து விட்டது. மஞ்சள் நீராட்டு விழாவே கல்யாணம்போல் அமைந்தது. நெருங்கிய உறவினர்கள் ஊரைக் கூட்டி விசேஷம் நடத்தினர். இன்றும் கிராமப்புறங்களில் அந்தக்கால சம்பிரதாயங்களை சிலர் பின்பற்றுகிறார்கள். மாமா, மாமி குடும்பத்தினர் தடபுடலான சீர் வரிசைகளை செய்து ஒன்று கூடி மகிழ்கிறார்கள். ஊருக்கே தெரிந்த விஷயங்கள், இன்று பக்கத்து அறையில் இருப்பவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை.

அன்று வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி ஓடிக் கொண்டேயிருந்தோம். கொஞ்சம் சம்பாதித்து சந்தோஷமாகக் கூடி மகிழ்ந்தோம். இன்று கிடைப்பதையெல்லாம் சாப்பிட்டு உடலை சரியாக பராமரிப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கிறோம். சிறியவர்கள் கூட இந்த வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வீட்டில் ஒரு பையனோ, பெண்ணோ உயர் கல்விக்குச் சென்றால் கூட, குடும்பமே கூடி மகிழ்ந்தது.

அனைவரும் ஒன்று கூடி ஆசீர்வதித்து, நினைவுப் பரிசுகள் தந்து பாராட்டி வெற்றியுடன் திரும்ப வாழ்த்தி அனுப்பினார்கள். இன்று உயர் கல்விக்கு பிள்ளைகள் போகாத வீடுகளேயில்லை. ஆனால் கூடி மகிழும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவுதான். கைப்பேசியில் வாழ்த்து சொல்வது நாகரீகமாகிவிட்டது. நெருக்கமும் குறைந்து விடுகிறது. மீண்டும் என்றோ அவர்கள் வரும்பொழுது தெரிந்தால் ஒரு சந்திப்பு நடைபெறும். அப்பொழுது அவர்கள் குடும்பம் மாறியிருக்கும். நம் கலாச்சாரங்கள் மறந்திருக்கும்.

இப்பொழுது போல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில், வெளியூரிலிருந்து வந்தால் அனைத்து சொந்தக் காரர்கள் வீட்டிற்கும் சென்று பாசப்பிணைப்பை காட்டினோம். இப்பொழுது தொடர்புகள் மட்டும் காட்டப்படுகிறது. திருமணத்தின் முன்பாக வீட்டிற்கு உறவினர்கள் வந்து போவார்கள். வாங்கிய பொருட்களான நகை-நட்டுகள், வெள்ளிப் பொருட்கள், பட்டுப் புடவைகள் என அனைத்தையும் கண்காட்சி போல் அடுக்கி வைப்பார்கள்.

அதைப் பார்க்க ஒவ்வொரு உறவினராக வந்து போவார்கள். அம்மா, ‘இன்று சித்தி-சித்தப்பா சீர் வரிசை பார்க்க வரப்போகிறார்கள். அதனால் வீட்டிலேயே இரு… வெளியே சென்று விடாதே’ என்பார். விருந்தினர் வரப்போகிறார் என்றாலே ஒரே மகிழ்ச்சிதான். கண்டிப்பாக ஏதேனும் இனிப்பு, காரங்கள் செய்யப்படும். பார்க்க வருபவர் அனைவரும் தங்கள் திருமணத்தின் அனுபவங்களை அலசுவார்கள். வீடே கலகலவென்றிருக்கும். சீர் வரிசைகள் பற்றி கூட உறவினருக்கு தெரியப்படுத்துவது என்பதும் ஒரு குடும்ப முறையாக காணப்பட்டது. இதைப் பார்க்கும் நெருங்கிய உறவினர்கள் சீர் வரிசையில் இல்லாத பொருட்களை குறித்துக் கொண்டு, அதை தான் வாங்கித் தரலாம் என்றும் நினைப்பார்கள். சிலர் ‘உனக்கு வேறு ஏதாவது தேவையா’ என்று வெளிப்படையாகவே ேகட்பர்.

ஆக, சிறிய விஷயங்கள் முதல் திருமணம் நிச்சயம் செய்வது வரை உறவினர்கள், பெரியவர்கள் வாழ்த்தும் கிடைத்துக் கொண்டேயிருக்கும். வெளிநாடுகளில் கூட, சிலர் தனக்கு என்ன பொருள் திருமணப் பரிசாக தேவைப்படும் என்பதை முன் கூட்டியே சொல்வதுண்டு. ஒரே பொருளை பலர் கொடுத்துவிட்டால், பலனில்லாமல் போகும் என்பதற்காக எத்தகைய பொருள் வேண்டுமென கேட்டுக் கொண்டு அதே பொருளை தருவதற்கு தயாராவர். நம் கலாச்சாரம் வாய் திறந்து கேட்டாலே கௌரவம் போய்விடும் என்று கருதுவதாகும். நம் கலாச்சாரங்கள் ஒவ்வொன்றும் பெரியவர்களால் காரணத்தோடு நியமிக்கப்பட்டதாகும். சீர் வரிசை பார்த்து முடித்துவிட்டால், அடுத்து என்ன?

‘நலங்கு’தான். மணப்பெண் – மணமகன் இருவர் வீட்டிலும் நடைபெறும்.

திருமணம் நல்லபடியாக நடை பெறுவதற்காக மணமக்களை வாழ்த்தி அனுப்புவது போன்று, கல்யாணத்திற்கு சில நாட்கள் முன்பாகவே, ஒரு நல்ல நாளில் பெரியவர்கள் ஒன்று கூடி, பெண்ணை மணையில் அமர வைத்து, கை, கால்களில் நலங்கு வைத்து, பன்னீர் ெதளித்து, அட்சதையிட்டு ஆசீர்வதிப்பார்கள். இப்பொழுது வட இந்தியா போல இங்கும் ‘மருதாணி விழா’, சங்கீத் என்றெல்லாம் சொல்லி அதில் புதுமையை புகுத்தி விட்டார்கள்.

திருமணப் பேச்சு ஆரம்பம் முதல் பெண்-மாப்பிள்ளை ஹனிமூன் வரை வீடுகளில் மகிழ்ச்சிக்குக் குறையில்லை. இப்பொழுது வேலை பளு, நேரம் கிடைக்காமல் போவது என பல காரணங்களுக்காக நாம் ஒன்று கூடி மகிழ்வதையெல்லாம் குறைத்துக் கொண்டோம். உறவுகள் அடிக்கடி வந்து போய்க் கொண்டு, விசேஷ நாட்களில் பெரியவரை சந்தித்து ஆசி பெறுவது போன்ற பழக்கங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன. வீட்டிற்கு உறவினர்கள் வராமல் நேரே திருமண மண்டபத்திற்கு வந்து விடுகிறார்கள். அதனால் தனிப்பட்டு ஒருவருக்கொருவர் பேசிப்பழகும் உறவும் பாதித்துவிட்டது.

எந்த விசேஷங்களுக்கும் வீட்டிற்கு வராமல், விழா நடக்குமிடத்திற்கு மட்டும் வந்து போனால், அது தெரிந்தவர்கள், நட்பில் இருப்பவர்கள் என்பது போலத்தான் அமையும். அதனால் மனம் விட்டுப் பேசி பழகுவதில் நிறைவு ஏற்படாமல் போகும். பாசப் பிணைப்பும் குறையும். அடிக்கடி பார்த்துப் பேசி வீட்டிற்கு வந்து போகும் சில நண்பர்கள் கூட உறவினர் போல் அமைந்து விடுவர். இத்தகைய பாரம்பரிய கலாச்சாரங்களும், விசேஷங்களும் நம் மண்ணிற்கே உரித்தானது. வெளிநாடுகளில் அப்படியெல்லாம் கிடையாது. சந்திக்க நேரம் கேட்காமல் யார் வீட்டிற்கும் நினைத்த படி போய் விட முடியாது.

நம் கலாச்சாரத்தில் தான் என்னென்ன உறவுமுறைகள், எத்தனைஎத்தனை பண்டிகைகள்! அத்தனையும் நமக்கு அரண்போல் திகழ்ந்து ஆனந்தத்தை மட்டுமே அள்ளித் தருமல்லவா? நம்
மூதாதையர் அனுபவித்ததை நாம் அனுபவிக்கவில்லை. நம் வாழ்க்கையில் மகிழ்ந்த நாட்களை நம் பிள்ளைகளுக்கு தர முடியவில்லை. இனி பிள்ளைகளின் பிள்ளைகள் வாழ்க்கை எப்படி ஆகுமோ? முடிந்தவரை உறவுகளை சொல்லித் தந்து, ஊரறிய போற்றச் செய்வோமே!

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன் 

You may also like

Leave a Comment

fifteen + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi