நன்றி குங்குமம் தோழி
அன்றும் இன்றும்!
பத்து வயதில் நாம் கண்ட வாழ்க்கைக்கும், ஐம்பது வயதில் நாம் வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிடவே முடியாது. குறிப்பாக அறுபது எழுபதுகளில் கண்ட அணாக்காசுகளைப் பற்றி சொன்னால் கூட நம் பிள்ளைகளுக்கு புரியாது. இப்பொழுது ஆளுக்கு ஒரு கைபேசி என்பது அத்தியாவசியமாகி விட்டது. எல்லாப் பொருட்களும் கைக்கு வந்துவிட்டது. ஆனால் உறவுகளை தூரத்தில் வைத்துவிட்டோம்.
ஒரு சமயத்தில் தூரத்திலிருந்து உறவினர்கள் தொலைபேசியில் அழைப்பார்கள். தொலைபேசியில் அடித்தவுடன் போட்டி போட்டுக் கொண்டு எடுக்க வீட்டில் உள்ளவர்கள் ஓடி வருவார்கள். ஒருவர் பின் ஒருவராக சில வார்த்தைகளாவது பேசி விட்டுத்தான் தொலைபேசியை வைப்பார்கள். எங்கோ இருக்கும் உறவினர்கள் கூட நெருக்கமாக இருப்பது போல உணர்ந்தோம். எண்கள் கொண்ட தொலைபேசிக்கு வீட்டில் அப்படி ஒரு ‘டிமாண்ட்’ இருந்தது. அந்தத் தொடர்பு நம்மை என்றும் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இன்று உலகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் உறவுகளுடன் கையில் வைத்துக் கொண்டு முகம் பார்த்து பேசும் வசதி உள்ளது. ஆனால் உறவுகளையே நாம் உதறிவிட்டால், எங்கிருந்து நெருக்கம் வரும்.
ஒரு நண்பனுக்கு அப்பா, அம்மாவாக இருந்தவர்களை, மற்ற நண்பர்களும் அப்பா, அம்மா என்று அழைத்தார்கள். வீட்டில் ஒரு பென்சில், பேனாவிற்கு சண்டையிடுவார்கள். ஆனால் உடனே சமாதானம் ஆகிவிடுவார்கள். இது அன்றைய காலகட்டத்தில் சகஜமாக இருந்தது. அதே போல் பழைய நோட்டுப் புத்தகங்களில் மீதம் இருக்கும் எழுதாத காகிதங்களையெல்லாம் ஒன்றாக ‘பைண்ட்’ செய்து தான் அடுத்த ஆண்டுக்குத் தருவார்கள். மூத்தவர் பயன்படுத்திய பள்ளிச் சீருடை தான் இளையவருக்கு வந்து சேரும். கல்லூரி வந்த பிறகுதான் சைக்கிள் வாங்கித் தருவார்கள். ஒரு மணி நேர சைக்கிள் வாடகைக்கான காசுதான் அம்மா தருவார்.
அந்த நேரத்தில் ஆளுக்குக் கொஞ்ச நேரம் என சைக்கிளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு பக்கத்துத் தெருவுக்கு ஓடுவான். அதற்குள் மற்ற பிள்ளைகள் கார் சக்கர டயரை குச்சியால் உருட்டிக் ெகாண்டே பின்னால் ஓடுவார்கள். பெண் பிள்ளைகள் சூழ்ந்து வட்டமடித்து பாட்டு பாடிக் கொண்டிருப்பார்கள். “கொல கொலக்கா முந்திரிக்கா, நரிய நரிய சுத்திவா” பாட்டு நிற்கும் பொழுது அவரவர் இடத்தில் யார் இல்லையோ, அவர்கள் ‘அவுட்’ ஆவார்கள். இப்படித் தெருவே மைதானமாக, விருப்பம் போல் ஓடியாடும் இடமாக பிள்ளைகளுக்கு அமைந்து உடற்பயிற்சியை அளித்தது.
கிண்டலடிப்பார்கள், கேலி செய்வார்கள் என்கிற பயமெல்லாம் கிடையாது. டி.வி. போன்ற பொழுது போக்குகள் இல்லாததால், மாலையில் பெண்கள் வீட்டின் வாயிற் திண்ணையில் அமர்ந்தபடி, நாட்டு விஷயங்களையும், தெருவில் நடக்கும் விஷயங்களையும், அலசுவார்கள். எல்லோர் வீட்டிலும் ஒரு ரேடியோ பெட்டிதான் இருக்கும். அப்பா, அம்மா பாட்டு கேட்பார்கள், செய்திகளை தவறாமல் கேட்பார்கள். பிள்ளைகளுக்கோ நாடகங்கள், விளையாட்டு வர்ணனைகள் கேட்க விருப்பம் ஏற்படும்.
ஆள் ஆளுக்கு ஒரு பக்கம் ரேடியோவை தூக்கிக் கொண்டு ஓடுவது கூட ஒரு விளையாட்டாகத்தான் இருக்கும். எத்தனை பிள்ளைகள் இருந்தாலும், பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படவேயில்லை. அம்மாவுக்கு ஒரு நாள் சமைக்க முடியாவிடில், அத்தை வீட்டிலிருந்தோ, மாமா வீட்டிலிருந்தோ சாப்பாடு வரும். உடம்பு சரியில்லை என்றால் பாட்டி, தாத்தா சொல்லும் வைத்தியம்தான். சொந்த உறவுகள்தான் உதவ வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் கிடையாது. ஒன்றுவிட்ட, இரண்டு விட்ட உறவுகளோ, தாயாதி-பங்காளியோ யாராயிருப்பினும் உதவ முன் வருவார்கள். மனிதர்களை நேசித்து உதவுவதில் அக்கறை காட்டினார்களே தவிர, செலவை யாரும் யோசித்ததாக தெரியவில்லை.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சிகள் மூலம் உடல் நலமும் அனைவருக்கும் நன்றாக இருந்தது. மருத்துவரிடம் சென்ற நாட்களே குறைவு. திருவிழாக்களையும், குடும்ப பண்டிகைகளையும் சந்தோஷமாகக் கொண்டாடினர். ஆடம்பரப் பொருட்கள் காணப்படாவிட்டாலும், குடும்பத்திற்கு தேவைப்படும் பொருட்கள் அவசியம் இருந்தன. பாட்டியோ, அம்மாவோ, அத்தையோ தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெயை தடவினால் போதும், அவரவர் சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு தாளம் போட ஆரம்பித்து விடுவர்.
செக்கு எண்ணெய் தடவி, ‘முறுமுறு’ வென தோசைக்கு இடித்துப் பொடித்த மிளகாய்ப் பொடியுடன் சேர்த்து சாப்பிட அப்படியொரு ருசி. இன்று நட்சத்திர ஹோட்டல்களில் சிறப்பு உணவாக கருதப்படும் கல் தோசைதான் அன்று நம் மூதாதையர்களால் தினசரி செய்யப்பட்டது. இட்லிக்கு ‘மல்’ துணி என்று இரண்டு, மூன்று ‘செட்’ வாங்கி வைப்பார்கள். இட்லி தட்டு அளவுக்கு ரவுண்டாக வெட்டி வைத்திருப்பர். 5, 7 என இட்லி தட்டுக்களை வாணலியில் நீர் வைத்து அதன் மேல் இட்லி தட்டில் துணி போட்டு எண்ணெய் தடவி இட்லி ஊற்றி வைப்பார்கள். 10 நிமிடத்தில் ஆவி வந்தவுடன் துணியுடன் கவிழ்த்துவிட்டு, அடுத்தபடி வைப்பார்கள். வெள்ளை வெளேரென்று இட்லிகள் மல்லிப்பூ மாதிரி மென்மையாக இருக்கும்.
ஒவ்வொரு சாப்பாட்டுப் பதார்த்தமும் நம் மூதாதையர்கள் செய்த பொழுது உடல் நலத்தை கவனத்தில் வைத்தே தயாரித்தார்கள். அதனால் தானே என்னவோ அந்தக் கால மனிதர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் திகழ்ந்தார்கள். இன்றைய காலம் போல புதுப்புது வியாதிகள் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். சிறு தானியங்கள் நிறைய பயன்படுத்தினார்கள். இயற்கை உணவை விரும்பி சாப்பிட்டோம். இன்று ஆவியில் வேகும் இட்லி கூட ‘தட்டு’ இட்லி உருவத்தில் அனைவராலும் விரும்பப்படுகிறது.
காரணம், சமைப்பதும் ஒரு சிரமமான காரியம் போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. பிள்ளைகளுக்கு நாக்கிற்கு ருசியாக தர வேண்டியுள்ளது. அதற்காக நம் மூதாதையர்களோ, தாத்தா-பாட்டிகளோ மீண்டும் வரப்போவதில்லை. இன்றைய எழுபது எண்பது வயதுக்காரர்களைப் போல நம் பிள்ளைகள் வளர வேண்டுமானால், நம் பழைய சிந்தனைகள் சிலவற்றையாவது சொல்லித்தர வேண்டும். நம் இலக்கியங்களை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் செயல்படுகின்றன.
அதுபோல் இப்பொழுது சிறு தானியங்கள் பற்றி நிறைய விழிப்புணர்வுகள் தரப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். உறவுகளை சொல்லித் தந்து பாச பந்தத்தை ஏற்படுத்தித் தருவோம். இன்றைய நம் பிள்ளைகள்தான் எதிர்காலத் தலைவர்கள் ஆகப்போகிறார்கள். அன்பு, பாசம், பந்தம் இவற்றுடன் நாம் கடந்து வந்த பாதையை அவர்களுக்கு சொல்லித் தந்தால், அவர்கள் உலகில் தனித்து விடப்பட மாட்டார்கள். பல குழந்தைகள் காலம் போய், இரண்டு குழந்தைகள்தான் என்பதுமில்லாமல் நிறைய குடும்பங்களில் ஒரே ஒரு வாரிசாக வளர்வது என்பது மூத்த தலைமுறையினருக்கு கவலை தருகிறது. அவர்கள் பலருடன் உறவாடி, பழமையை பின்பற்றட்டும்.
அன்று மன உளைச்சல் என்றால் என்னவென்றே தெரியாது. இன்று 3 வயது குழந்தை கூட “என்னை ‘டென்ஷன்’ பண்ணாதே!” “இது என் ‘பர்சனல்’ இதை யாரும் எடுக்கக் கூடாது” என்றெல்லாம் பேசுகிறது. அவர்களை நாம் குறை சொல்லக் கூடாது. அவர்கள் வளரும் காலகட்டம் அப்படி அமைந்துவிட்டது. முதல் பிள்ளைக்கு பொம்மையோ, விளையாட்டுப் பொருட்களோ, சைக்கிளோ வாங்கினால், அதுதான் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு வந்து சேரும். இப்பொழுது இருவர் இருந்தால், இருவருக்கும் தனித்தனியாக அனைத்தும் வாங்கத்தான் வேண்டும். சமயங்களில் சில உறவினர் வீடுகளில் வளர்ந்து விட்ட பிள்ளைகள் தாங்கள் பயன்படுத்திய பொருட்களைக் கூட தந்து விடுவர். அதெல்லாம் தவறாக கருதப்படவில்லை.
ஆனால் இன்று நாம் பயன்படுத்தியதை அநாதை ஆசிரமங்களுக்குத் தான் தருகிறோம். வீட்டுச் சாப்பாடு மட்டுமே பிரதானமாகக் கருதப்பட்டது. இன்று பள்ளி பிள்ளைகள் கூட கேண்டீனில் வாங்கி சாப்பிடுவதைத்தான் விரும்புகிறார்கள். உறவுகள் நெருக்கமாக இருந்தது. யாரும் பிறரை நோகாமல் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு உதவ முன் வந்தனர். மனம் திறந்து உறவுகளுடன் பேசவும், நிலையை எடுத்துரைக்கவும் சாத்தியங்கள் இருந்தன. அதே நிலைமை வந்தால், நம் பிள்ளைகளின் உறவும் பலப்படும்.
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்