ஓஸ்லோ: பெண்கள் உரிமைக்காக போராடி தற்போது சிறையில் உள்ள பெண் ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. இந்தாண்டு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 2ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஈரானில் பெண்கள் உரிமை, ஜனநாயகம் மற்றும் மரண தண்டனைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடிய பெண் சமூக ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நர்கீஸ், ஈரானில் ஆற்றிய ஒட்டு மொத்த பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இவர் இன்னும் எந்த வகையில் சிறப்பாக பணியாற்ற முடியுமோ அதனை ஊக்குவிக்க இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. நர்கீஸ் முகமதி மொத்தம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 13 முறை சிறை சென்றுள்ளார்.