ராய்பூர்: ராஜஸ்தானை தொடர்ந்து சட்டீஸ்கரிலும் பலாத்காரம் செய்தவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற அறிவிப்பை காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்து இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கப்படாது என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார். அதை பின்பற்றி சட்டீஸ்கரிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்று முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்து இருக்கிறார். சுதந்திரதினத்தை முன்னிட்டு சட்டீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் நடந்த விழாவில் பாகெல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் இதுபற்றி கூறுகையில்,’ பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் மரியாதை மற்றும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது எங்கள் முன்னுரிமை. சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்தவர்களுக்கு அரசு வேலை கிடையாது. அவர்கள் அரசு வேலைகளில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.