தண்டையார்பேட்டை: தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் பாஜவால் வெற்றிபெற முடியாது, என தயாநிதி மாறன் எம்.பி கூறினார். சென்னை மாநகராட்சி, 5வது மண்டலம், துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 56, 57வது வார்டுகளுக்கு உட்பட்ட தங்கசாலை முதல் என்எஸ்சி போஸ் சாலை வரை மற்றும் முத்தியால்பேட்டை பிரகாசம் சாலை ஆகிய பகுதிகளில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்க விழா, நேற்று நடந்தது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளருமான தயாநிதி மாறன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் எம்.பி கூறியதாவது: தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்ற கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த தயாநிதி மாறன், இந்தியா முழுவதும் மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோல் விலை, மற்ற பொருட்களின் விலையை பாஜ அரசு ஏற்றி இருப்பதால் நாடு முழுவதும் ஒன்றிய அரசிற்கு எதிர்ப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் பாஜவால் வெற்றிபெற முடியாது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த மழைநீர் கால்வாய் பணி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், திமுகவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.