நாகர்கோவில்: அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்துள்ளது நாங்கள் தான் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மீனவர்கள் தட்ப வெப்பநிலை, புயல் போன்ற காரணங்களினால் எல்லை தாண்டும் போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. நாம் உடனடியாக தலையிட்டு அவர்களை பத்திரமாக மீட்டு வருகிறோம். அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல்முறையாக மீனவர்கள் நலனுக்காக ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, அதிமுக போட்ட பிச்சையில்தான் 4 பாஜ எம்எல்ஏக்கள் உள்ளார்கள் என்று ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு எல்.முருகன், ‘இதுபற்றி மாநில தலைவர் தெளிவாக பதில் அளித்துள்ளார். அவரது கூற்றுப்படி நாங்கள்தான் அவர்களுக்கு (அதிமுக) எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்துள்ளோம். கூட்டணி என்றால் கொடுக்கல் வாங்கல் இருக்கும். எங்களது வாக்குகளை மாநிலம் முழுவதும் வாங்கியுள்ளார்கள். எங்களது வாக்குகளால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு வந்துள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.