சென்னை: பாஜகவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கட்சி சார்பில் முடிவு எடுத்து அறிவித்துவிட்டோம். 2026-ல் மட்டுமல்ல எப்போதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை.
பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. பாஜக உடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை, அது தான் அதிமுக நிலைப்பாடு. அதிமுக நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, எடுத்த முடிவு எடுத்தது தான். எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்துடன் வரும் கட்சிகளுடன் பேசி கூட்டணி அமைப்போம் என்றே எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கே.பி.முனுசாமியும் மழுப்பல்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணியா என்ற கேள்விக்கு நேற்று எடப்பாடி மழுப்பல் பதிலளித்த நிலையில் கே.பி.முனுசாமியும் மழுப்பல் தெரிவித்துள்ளார். வழக்கமாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறுவார் கே.பி.முனுசாமி. ஆனால் இன்று மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளிக்க கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.