நன்றி குங்குமம் தோழி
இன்றைய நவீன யுகத்தில் தனித்துவமான ஐடியாக்கள் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றுத் தருகிறது. கொஞ்சம் முதலீடு, நட்டமில்லா நல்ல லாபம் என்பதே தொழிலில் பலருக்குமான சவாலான விஷயமாக இருக்கிறது. அப்படியான ஒரு தொழிலை செய்து திருப்பத்தூரை கலக்கி வருகிறார் பெண் தொழில்முனைவோரான ஃபாயிஷா காதர்.பரிசுப் பொருட்கள் என்றாலே பலருக்கும் மகிழ்ச்சிதான். அது விதவிதமான அலங்காரங்களில் ஜொலித்தால் கூடுதல் மகிழ்ச்சிதானே. அப்படிப்பட்ட கலர்ஃபுல்லான பரிசுப் பொருட்களை திருமணம் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கும் செய்து கொடுத்து அசத்தி வருகிறார்.
கலைப்பொருட்களின் மேல் ஆர்வம்! எனது சொந்த ஊர் காயல்பட்டினம். திருமணத்திற்குப் பிறகு திருப்பத்தூரில் வசித்து வருகிறேன். கலைப்பொருட்கள் செய்வதில் எனது அம்மாவுக்குதான் முதலில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அவர்களிடமிருந்துதான் எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் போது உபயோகமற்ற சில பொருட்களை வைத்து நிறைய கலைப்பொருட்கள் செய்ய கற்றுத் தந்தார்கள். அப்போது ஏற்பட்ட ஆர்வத்தினால் சாக்லேட் பேப்பர், தேங்காய் ஓடு, ஐஸ்கிரீம் குச்சி போன்ற பொருட்களை வைத்து நானே கிராப்ட்டுகள் தயாரித்து வந்தேன். பிறகு நாட்களாக எனக்கு இதில் அதீத ஆர்வம் ஏற்பட துவங்கியது.
இதனை வைத்து பிசினஸ் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடமே அதனை செயல்படுத்தியும் விட்டேன். தற்போது சில வருடங்களாக இதனை வெற்றிகரமான பிசினஸாக செய்தும் வருகிறேன். எனது கலையார்வத்தின் வெளிப்பாடுகள் காரணமாக பலவிதமான கிஃப்ட் ஐயிட்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். வீட்டிலேயே விதவிதமான சாக்லேட்களை தயாரித்து, அதில் அலங்கரித்தும் பெயர் எழுதியும் தருகிறேன். பரிசுப் பொருட்கள் வித்தியாசமாக இருப்பதால், பலர் என்னை நாடி வருகிறார்கள்.
உங்களின் ஸ்பெஷாலிட்டி!
ஆரம்பத்தில் கிஃப்ட் ஹாம்பர்ஸ் மட்டுமே செய்து வந்தேன். அதற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ரம்ஜான் நேரத்தில் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசுகளை அனுப்புவதற்காக என்னிடம் அதனை செய்து தரச்சொல்லி கேட்டார்கள். அதனையும் செய்து தர துவங்கினேன். சிலர் முந்திரி மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் பாக்ஸ்கள் அழகாக கிஃப்டாக செய்து தரச்சொல்லி கேட்டார்கள். அவர்கள் கேட்டதையும் அவர்கள் விரும்பிய வண்ணத்தில் செய்து கொடுத்தேன்.
அதை பார்த்துதான் திருமணத்திற்கான சீர்வரிசை தட்டுகள் செய்யும் ஆர்டர்கள் வரத்துவங்கியது. சீர்வரிசை தட்டுடன் ரிட்டர்ன் கிஃப்ட்களும் செய்து தரச்சொல்லிக் கேட்டார்கள். இப்படியாக குறிப்பிட்ட சீசன் மட்டுமில்லாமல் 365 நாட்களும் ஆர்டர்கள் வந்ததால், இதனை முழுநேர வியாபாரமாகவே மாற்றிக் கொண்டேன். சீர்வரிசை தட்டுகளில் ஹோம் மேட் சாக்லேட்களை லைட் எல்லாம் வைத்து அலங்கரித்து தர அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சிலர் சர்பிரைஸ் கிஃப்டும் ஆர்டர் செய்கிறார்கள்.
என்னதான் நான் பலவிதமான கிஃப்ட்டுகளை வடிவமைத்தாலும், வாடிக்கையாளர்கள் விரும்பும் கஸ்டமைஸ் டிசைன்களை செய்து தருவதே எங்களது ஸ்பெஷாலிட்டி. சீர்வரிசை தட்டுகள் எத்தனை கேட்கிறார்களோ அதற்கேற்ப அவர்களின் பட்ஜெட்டிற்கு தகுந்தபடி செய்து தருகிறோம். மோதிரம் நகை வைக்க ஸ்பெஷல் டிசைனில் பெட்டிகள், மணமக்கள் பெயர்கள் பொறித்த ஹல்தி மற்றும் மெஹந்தி விழாக்களுக்கான ப்ளேட்டுகள் என அனைத்துமே அவர்கள் விரும்பும் வகையில் செய்து கொடுக்கிறேன்.
இதனை தவிர கல்யாண நாள், பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கு சர்ப்ரைஸ் கிஃப்டும் உண்டு. அவர்களுக்கான பட்ஜெட் மற்றும் விருப்பத்தினை தெரிவித்தால் போதும் நாங்களே அதனை தயாரித்து அவர்களின் வீட்டிற்கே அனுப்பி விடுகிறோம். அதனை சிறப்பாக தயாரிக்க போதுமான நேரம் மட்டும் கொடுத்தால் போதும், சொன்ன தேதியில் சொன்ன இடத்திற்கு அனுப்பி வைத்திடுவோம்.
எதிர்கால திட்டங்கள்!
பழங்காலப் பொருட்களை சீர்வரிசை தட்டுக்களில் புதுமையான வகையில் செய்து தர வேண்டும் என்கிற எண்ணங்கள் இருக்கிறது. இது குறித்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும். நேரிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தினால் இன்னும் சிறப்பாக செயல்வடிவம் தரமுடியும் என்று நம்புகிறேன். அதேபோன்று எங்களது கலைப்பொருட்களை ஆன்லைன் மூலம் அதிகம் பேரை சென்றடைய செய்ய வேண்டும் என்கிற விஷயங்களையும் நடைமுறைப்படுத்த மேற்கொண்டு வருகிறேன். அதன் மூலமாக விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். மேலும் புதிய வகை கலைப்பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
தொழிலுக்கான முதலீடு!
லட்சக்கணக்கான முதலீடுகள் ஏதும் தேவையில்லை. சில நூறுகளை வைத்தே இத்தொழிலை துவங்கலாம். இதற்கு மிகவும் முக்கியம் கற்பனை வளமும் கிரியேடிவ் எண்ணம் மிகவும் அவசியம். உபயோகமற்ற விலை குறைவான எளிய பொருட்களை வைத்து கண்ணை கவரும் வகையில் நிறைவான தரமான பொருட்களை தயாரிக்க முடியும். அதற்கு ஆடம்பரமான விலைஉயர்ந்த பொருட்களை வைத்துதான் செய்ய முடியும் என்பதில்லை. குறைந்த முதலீட்டில் நல்ல லாபகரமான தொழில். இதற்கு பெரிய அளவில் இடவசதிகள் கூட தேவையில்லை. இதில் முக்கியமாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை கவரக் கூடியவாறு பொருட்களை செய்வதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
இதற்கான பயிற்சிகள்!
எந்த ஒரு கலையுமே பயிற்சி எடுத்தால் தான் முழுமையடையும். எனவே இதற்காக சென்னை மற்றும் பெங்களூர் என பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு சென்று முறையாக பயிற்சி பெற்றேன். இதில் சில நுணுக்கமான வழிமுறைகள், கூடுதல் தகவல்களை திறன்பட கற்றுக்கொண்டேன். பயிற்சிகள் மூலம் எனது தயாரிப்பின் வடிவமைப்பும், பொருட்களின் அழகும் கூடுதல் மெருகேறியது என்று சொல்லலாம். எனது கற்பனைத் திறனும் கிரியேட்டிவிட்டியும் கூட அதிகரித்தது. முறையான பயிற்சி இருந்தால் எளிதாக தொழிலை கூடுதல் சிறப்புடனும் நேர்த்தியுடனும் தயாரித்து வாடிக்கையாளர்களை கவரலாம்.
விற்பனை வாய்ப்புகள்!
தற்போது கல்யாணம் போன்ற விழாக்கள் என அனைத்திலும் ஆடம்பரத்தை பார்க்க முடிகிறது. நம் வீட்டில் நடைபெறும் விழாக்கள் புதுமையாக இருக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். பதினொரு சீர்வரிசை தட்டிலிருந்து 501 தட்டுகள் வரை வைக்கிறார்கள். அவை வித்தியாசமாக விதவிதமான அலங்காரத்தோடு இருக்க வேண்டும். மேலும் விசேஷங்களுக்கு வருபவர்களுக்கும் வித்தியாசமான ரிட்டன் கிஃப்ட்டுகளை கொடுக்க விரும்புகிறார்கள்.
அதன் அடிப்படையில் இந்தத் தொழிலுக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. உங்கள் பொருட்கள் தரமாகவும் நேரத்தியாகவும் இருந்தால் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். முதலில் பிறந்தநாள் விழாவில் ஆரம்பித்து பின்னர் பெரிய ஆர்டர்களை கூட பிடிக்கலாம். பெரும்பாலும் ஒருவருக்கு பிடித்து இருந்தால் அதுவே வாய்மொழி மூலமாக மற்றவர்களுக்கு பரவும். ஆன்லைனில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமும் ஆர்டர்கள் கிடைக்கும். வெளியூர் ஆர்டர்கள் எடுக்கும் போது, பேக்கிங் செய்வது ரொம்ப முக்கியம். காரணம், பொருட்களை எந்தவித சேதம் இல்லாமல் அவர்களிடம் சேர்க்கும் வரை நம்முடைய பொறுப்பு.
பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது!
முறையாக பயிற்சி பெறுவது அவசியம். பெண்களுக்கு ஏற்ற பாதுகாப்பான தொழில். சிறிய முதலீடு, கற்பனை வளம், நவீன ஐடியாக்கள் என இருந்தால் போதுமே தொழிலில் பட்டையை கிளப்பி விட முடியும். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்க்கலாம். நஷ்டமில்லாத தொழில். துணிந்து இறங்கி வெற்றி கொள்ளுங்கள் என தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார் ஃபாயிஷா காதர்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்