Wednesday, July 9, 2025
Home மருத்துவம்ஆலோசனை வேண்டாமே கேளிக்கை மோகம்!

வேண்டாமே கேளிக்கை மோகம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபத்தில் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய வெற்றி விழா நிகழ்வு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பெரும் மகிழ்ச்சியோடு தொடங்கிய அந்த விழா, பெருத்த சோகத்தில் முடிந்தது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்தவர்களில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி செத்துப்போனார்கள். 47 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்கள். இதில், பெரும்பாலானவர்கள் இளையவர்கள்.

அதுதான் பெரிய கொடுமை. வாழ வேண்டிய வயதில் கேளிக்கை மோகத்தில் மூழ்கி வாழ்க்கையையே பறிகொடுத்திருக்கிறார்கள்.இதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் ஆந்திராவில் புஷ்பா 2 திரையரங்குக்கு நாயகன் அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் இறந்தார். தமிழகத்தில் சுனாமி வந்த போது, ‘கடல் ஊருக்கு வந்திடுச்சாம் போய் பார்த்துட்டு வரோம்‘ என்று போய் இறந்தவர்களும் உண்டு. மஞ்சும்மல் பாய்ஸ் படம் ஹிட் அடித்தவுடன் குணா குகை நோக்கி குவிந்தார்கள் மக்கள். கோவா கோயில் தேர் திருவிழாவில் ஆறு பேர் நெரிசலில் இறந்தார்கள்.

நிஜமாகவே இவர்களுக்கு பிரச்சனையின் தீவிரம் புரிந்திருக்கிறதா இல்லையா என்பதே புரியவில்லை. திரைப்படம் பார்க்க சென்றாலும் நெரிசல், விடுமுறையில் கோயிலுக்குப் போனாலும் நெரிசல், கிரிக்கெட் பார்க்கச் சென்றாலும் நெரிசல் எந்த நிகழ்வு என்றாலும் மொத்தமாய் கும்பலாய் கிளம்பிப் போய் நெரிசலில் சிக்கி, உயிரிழப்பது என்பது இந்தியர்களின் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு முக்கியமான காரணம் இந்தியர்களிடம் பெருகிக்கொண்டிருக்கும் கேளிக்கை மோகம்தான்.

நமக்கு நிஜமான கொண்டாட்டம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. குடியும் கும்பலாய் சேர்ந்து போய் நெரிசலை உருவாக்குவதும்தான் கொண்டாட்டம் என்று புரிந்துவைத்திருக்கிறோம். நமது காடுகளுக்குப் போய்ப் பாருங்கள். எத்தனை பீர் பாட்டில்களை போட்டு உடைத்து அந்த வழியே வலசை போகும் யானைகளின் கால்களை முடமாக்கி வைத்திருக்கிறோம் என்று தெரியும்.

ஏன் இப்படி நடக்கிறது. அமைதியான முறையில் காட்டுக்குள் போய் ரம்யமான இயற்கை அழகை மனதில் பருகி, நினைவுகளை நெஞ்சில் தேக்கி வந்து, அந்த அனுபவத்தை நண்பர்கள், உறவுகளிடம் பகிர்ந்துகொள்வதில் என்ன சிக்கல். அதில் இல்லாதவை குடியில் இருக்கிறதா? குடித்தாலும் அந்த பாட்டில்களை ஒழுங்காக அப்புறப்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏன் இல்லை. வைப் என்ற பெயரில் என்னென்ன அட்டூழியங்களை செய்துகொண்டிருக்கிறோம்.

இவ்வளவு கேளிக்கை மோகம் நம் சமூகத்தில் இருப்பது நிஜமாகவே ஆபத்தான விஷயம். இந்த கேளிக்கைகளின் பின்னால் இன்னொரு காரணம் இருக்கிறது. எங்கெல்லாம் கும்பல் அதிகமாகக் கூடுமோ, அங்கெல்லாம் கும்பலாகப் போய் அங்கு சில பல செல்பிகளை எடுத்து, இன்ஸ்டாகிராமில் போடுவது, யூட்யூப்பில் காணொலிகளை வலையேற்றுவது என்பதை இளையயோர் கூட்டம் ஒரு சமூகக் கடமை போல் செய்துவருகிறது.

அதிலும் இப்போது இன்ஸ்டாவிலும் யூட்யூப்பிலும் மானிட்டைசேஷன் என்று அந்த நிறுவனங்கள் எத்தனை வ்யூ போயிருக்கிறதோ அதற்கேற்ப தொகையும் தருவதால், இந்த டிஜிட்டல் வெறி மக்களிடம் அதிகமாகிவிட்டது. ஏதாவது, ஒரு இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் லட்சக்கணக்கில் வ்யூ காட்டி சம்பாதிப்பதைப் பார்த்து, பொறாமை கொண்டு நாமும் சம்பாதிக்காலம் என்று இறங்கிவிடுகிறார்கள்.

விளைவு கிரிக்கெட்டோ, சினிமாவோ, கோயில் திருவிழா எங்கு என்ன நிகழ்வு நடந்தாலும் செல்போனும், கேமராவும் கையுமாகக் கிளம்பிவிடுகிறார்கள். சிலர் இதெல்லாம் இல்லாமல் வெறுமனே வைப் செய்யப் போகிறோம் என்று செல்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையை வைப் மோகம் பேயைப் போல் போட்டு ஆட்டிவைக்கிறது. எல்லாமே இவர்களுக்கு வைப்தான். பார்ட்டி என்றாலும் வைப்தான். மீட்டிங் என்றாலும் வைப்தான். கோயில் என்றாலும் வைப்தான்.

உண்மையில் ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு மனநிலை உண்டு. பார்ட்டியில் ஒருவர் ஆனந்தமாக இருப்பதும், கொண்டாடுவதும் தவறே இல்லை. அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கோயிலில் என்ன வைப் இருக்கிறது. அது அமைதியான மனநிலையில் மனதை ஒருமுகப்படுத்தி, தனக்கு பிடித்த கடவுளிடம் தன்னை சரணடையச் செய்யும் உன்னதமான இடம். அங்கு தூய்மை, அமைதி போன்றவைதான் கடைபிடிக்கப்பட வேண்டியவை.

ஆனால், சனி ஞாயிறுகளிலும் விடுமுறைகளிலும் பழனிக்கோ திருவண்ணாமலைக்கோ திருச்செந்தூருக்கோ சென்று பாருங்கள். பழனி பஞ்சமாமிர்தம் போல் நெரிசலில் போட்டு பிதுக்கி எடுத்துவிடுவார்கள். அத்தனை கூட்டம். அங்கே எங்கே போய் அமைதியை தேடுவது. தூய்மையைப் பராமரிப்பது. நெரிசல் மிகுந்த இடங்களில் இயல்பாகவே தூய்மை என்பது காணாமல் போய்விடும். ஒரு காலத்தில் திருப்பதியிலும் சபரிமலையிலும்தான் கூட்டம் என்பார்கள். இன்றோ எந்த பெரிய கோயில்களுக்குமே போய் நிம்மதியாய் சாமி கும்பிட இயலவில்லை.

ஏன் இந்த நெரிசல் மோகம். பொதுவாக நம்மிடம் ஒரு கும்பல் மனநிலை உள்ளது. கும்பலோடு இருப்பதும். கும்பலாக ஓரிடத்தில் நுழைந்து அந்த இடத்தையே அட்ராசிட்டி செய்வதும் நம் மக்களுக்கு மிகுந்த போதை தரும் விஷயங்கள். இந்த இளையோர் கூட்டம் அதனைத்தான் வைப் என்கிறது. ஒட்டுமொத்த கூட்டமும் வரிசையில் நின்றுகொண்டு இருக்கும் போது, திடீரென ஒரு பத்திருபது பேர் கொண்ட குடும்பமோ நண்பர்கள் குழுவோ கூட்ட நெரிசலைப் பிளந்துகொண்டு அநியாயமாய் முன்னேறுவார்கள். அவர்கள் அப்படி முன்னேறுவதைப் பார்த்து வரிசையில் நிற்பவர்களும் முன்னே செல்ல முனைவார்கள்.

விளைவு கூட்ட நெரிசல். அந்த கொடூர நெரிசலில் சிக்கி முதியவர்களும் குழந்தைகளும் நோயாளிகளும் கடும் அவஸ்த்தை அடைவார்கள். சமயங்களில் உயிர்பலியும் நிகழும். இத்தனைக்கும் என்ன காரணம். ஏதோ ஒரு பத்து பேர் ஒழுங்காய் வரிசையில் வராமல் இடையில் புகுந்து முன்னேற பார்த்ததுதான். அவர்களை எது இப்படிச் செய்ய வைக்கிறது. அவர்களின் கும்பல் மனநிலைதான். நாம் பத்து பேர் இருக்கிறோம். நாம் ஐம்பது பேர் இருக்கிறோம்.

யார் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற அசட்டு எண்ணம் கொடுத்த துணிச்சல் அவர்களை இந்த அடாவடி செய்ய வைக்கிறது. உண்மையில் இந்த எண்ணம் இந்தியர்களிடம் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. நாம் காலம் காலமாக சாதிய சமூகமாக, இனக்குழு சமூகமாக வாழ்ந்து வந்தவர்கள். அது இயல்பாகவே நம்முள் ஒரு கும்பல் மனநிலையை உருவாக்கி வைத்திருக்கிறது. அது இந்த நவீன ஜனநாயக காலத்திலும் நம்மில் பிரதிபலிக்கிறது.

ஆனால், அது எத்தனை தவறான பழைய மனோபாவம் என்பதை நாம் புரிய வேண்டும். முதலில் நிறைய கூட்டம் கூடும் இடம் என்றால் இயன்ற வரை அதனைத் தவிர்க்க முயலலாம். நேரடியாகப் போய் அதனைப் பார்ப்பதைவிட தொலைக்காட்சியில் அதனை அபாரமாகப் பார்க்க முடியும். கூட்டம் இருக்கும் இடம் என்றால் முறையான வரிசையைப் பின்பற்றலாம். குறிப்பாக கோயில்களில் அமைதியான வரிசை முறை அனைவருக்கும் நல்லது. திருவிழா தேர் சமயங்களில் கோயிலுக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. தேர் பார்க்கும் போ நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாவதற்கு அமைதியாய் வீட்டில் இருந்தே கடவுளை வழிபடலாம். கூட்டம் போனதும் போய் இறைவனை தரிசிக்கலாம்.

நாம் நவீன சமூகமாக மாறிவிட்டோம். இதனை நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். எந்த இடத்திலும் வரிசையைப் பின்பற்றுவது. விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது. மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பது போன்ற நல்ல பழக்கங்களை கும்பலான இடங்களில் பின்பற்றுவது நல்லது. இதுவே ஆரோக்கியமான கொண்டாட்டத்தை உருவாக்கும் உருப்படியான வழி.

தொகுப்பு: சரஸ்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi