நன்றி குங்குமம் தோழிசென்னை பெரம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் வாய் பேசமுடியாத சிறுமி பலாத்காரம், விடுதியில் ஊனமுற்ற சிறுமி பாலியல் பலாத்காரம், மிட்டாய் கொடுத்து உறவினரே குழந்தையிடம் அத்துமீறல் என்ற செய்திகள் தினசரியில் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த சம்பவங்கள் நிகழ்வது ஏன்? சிறுமிகளை குறிவைத்து இந்த தாக்குதலை தொடுப்பது ஏன் என பல்வேறு கேள்விக்கணைகளுக்கு பதில் அளிக்க முன் வந்தார், சென்னை வேளச்சேரியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் சித்ரா கைலாஷ். ‘‘இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்ட பருவத்தில் 6ல் ஒரு குழந்தை பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தங்களுக்கு நேரும் பலாத்கார சம்பவத்தை குறித்து 55% பெண் குழந்தைகள் பெற்றோரிடம் தெரிவிப்பதில்லை. குறிப்பாக உத்தரப்பிரதேசம், ஆந்திரா, பீகார், அசாமில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. தற்போது இந்த செயல் சென்னையிலும் அதிகளவு பரவி வருகிறது. சிறுமிகள் மட்டுமில்லை, 90 வயது மூதாட்டியை கூட காமுகர்கள் விட்டுவைப்பதில்லை’’ என்றார் டாக்டர் சித்ரா. சிறுமிகளிடம் பாலுணர்வு குறித்து விழிப்புணர்வு அவசியமா? சிறுவயதிலேயே பெண் குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் வளர்ச்சி, பூப்பெய்துதல், ஆண், பெண் உறவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக 8 வயது முதல் சிறுமிகளுக்கு குட் மற்றும் பேட் டச் என்றால் என்ன என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும். ஸ்மிம் சூட் எனப்படும் குளியல் உடை அணியும் போது மறைக்கப்படும் இடங்கள் தான் நமது முக்கிய பாகங்கள். அந்த இடங்களை பிறர் தொட அனுமதிக்கக் கூடாது. இது குறித்து பெற்றோர்கள் குழந்தைகளிடம் எடுத்துக் கூற வேண்டும். ஆசிரியர்களுக்கும் குழந்தைகளிடம் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு உண்டு. இல்லாவிட்டால் நவீன காலத்தில் சமூக வலைத்தளம் மூலம் செக்ஸ் அறிவு குழந்தைகளுக்கு கிடைத்து விடும். ஆனால் அது நிச்சயமாக பாலுணர்வு குறித்து சரியான தகவலை தராது.யார் குழந்தைகள் உடம்பை தொடலாம்?பெற்றோர், டாக்டர்கள் பெற்றோர் அனுமதியுடன் குழந்தைகளை தொடலாம், பிற ஆண்களை பெண் குழந்தைகளுடன் நெருக்கமாக பழக விடக்கூடாது. யார் யாரால் பிரச்னை ஏற்படலாம்?குடியிருப்புகளில் காவல் காக்கும் செக்யூரிட்டிகள், கூர்க்காக்கள், பள்ளிக்கு வாகனத்தில் அழைத்து செல்லும் ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள் பெண் குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது. குறிப்பாக பள்ளி விடும் நேரமான மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலான காலக்கட்டத்தில் அதிகமான பாலியல் சில்மிஷங்கள் நடைபெறுகிறது. எனவே பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து வருவது தாமதமாக இருந்தால் ெபற்றோர்கள் உடனடியாக கண்காணிக்க வேண்டும்.பாலியல் வன்முறை என்பது என்ன?சிறுமிகளின் மர்ம உறுப்புகளை தொட்டு ஆண்கள் இன்பம் காணுதல் அல்லது குழந்தைகளை வைத்து தனது மர்ம உறுப்பை தொடச்செய்தல், குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தல், வாயில் அல்லது மர்ம உறுப்பில் ஆண் உறுப்பை நுழைத்தல் ஆகியவை பாலியல் சீண்டலாக கருதப்படுகிறது.தொடாமல் பாலியல் டார்ச்சர்கொடுப்பது சாத்தியமா?நிச்சயமாக, செக்ஸ் வீடியோவை காண்பித்தல், பாலியல் உறுப்புகளை பெண் குழந்தைகளிடம் காட்டுதல், உடை அணியாமல் குழந்தைகள் முன் குளித்தல், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புதல் மூலமும் தொடாமல் பாலியல் டார்ச்சர்களை கொடுக்கமுடியும் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். நெருங்கிய உறவினர்களே குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார்களே?ஆம், குழந்தையின் சித்தப்பா, மாமா, தாத்தா, வீட்டு வேலைக்காரர், பெற்றோரின் நெருங்கிய நண்பர்கள் என அனைவரிடமும் குழந்தைகள் மிக கவனமாக இருக்க வேண்டும். இது தவிர கோயில் பூசாரிகள், சர்ச் பாதிரியார்கள், ஆசிரியர்கள் கூட இத்தகைய வன்முறையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவத்தை வீட்டில் சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன், சொன்னால் உங்க அம்மா, அப்பாவை போலீஸ் பிடிச்சுட்டு போயிடுவாங்க, அப்பாவும் அம்மாவும் பிரிந்து விடுவார்கள் என மிரட்டி வைப்பதால் குழந்தைகள் தன்னிடம் தவறாக நடந்தவர்கள் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க பயப்படுகிறார்கள்.எப்படி உணர்ந்து கொள்வது? குழந்தைகளின் உடம்பில் கீறல் இருத்தல், ரத்தகாயம் பட்டிருந்தால் உடம்பில் ரத்தம் கன்னிபோயிருத்தல், பெண் உறுப்பில் நீர் எரிச்சல் ஏற்படுதல், நாற்றமடிக்கும் திரவம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் குழந்தைகள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக உணர்ந்து விழிப்புடன் செயல்படவேண்டும். அவர்கள் சில இடங்களை கண்டு அஞ்சுவார்கள். ஏனெனில் அந்த இடத்தில் ஆண்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது பள்ளிக்கு செல்ல பயப்படுதல், ஆட்டோ டிரைவரை கண்டு அஞ்சுதல் என இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் இதில் தொடர்பு கொண்டிருக்கலாம் என உணர்ந்து செயல்பட வேண்டும்.
கோமதி பாஸ்கரன்…