திருமலை : ஒய்எஸ்ஆர். கடப்பா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் சமரசம் கிடையாது என புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி சித்தார்த் கவுஷல் தெரிவித்தார். ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தின் புதிய எஸ்பியாக சித்தார்த் கவுஷல் நேற்று பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக, அவர் போலீசார் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், எஸ்பி சித்தார்த் கவுஷல் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இல்லை. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படும். பெண்கள் பாதுகாப்பு, சமூக விரோத சக்திகளை ஒழித்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சைபர் குற்றங்களை தடுப்பது, நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பது போன்ற மாநில அரசின் முன்னுரிமைகளில் கவனம் செலுத்தப்படும்.
மக்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் நேரடியாகவோ அல்லது `ஸ்பந்தனா’ மக்கள் குறை தீர்வு கூட்டத்தின் மூலமாகவோ என்னை தொடர்பு கொள்ளலாம். மேலும், மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் போலீசார் கூட்டாக செல்வோம். முதல்வர் மாவட்டத்தில் கடமையாற்றும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கூடுதல் எஸ்பி துஷார் துடி, ஆயுதப்படை கூடுதல் எஸ்பி கிருஷ்ணாராவ், போலீஸ் அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் துலாம் சுரேஷ், மாநில துணைத்தலைவர் உப்பு சங்கர் உள்ளிட்டோர் புதிய எஸ்பிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.