விழுப்புரம்: கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் பயிர்கள் அழிக்கப்பட்டு, என்எல்சி நிர்வாகம் பணிகள் செய்ததை கண்டித்து உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்திருந்தார். இதனை வரவேற்று விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் வாட்ஸ் அப் குழு ஒன்றில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த குழுவில் இடம்பெற்றுள்ள நல்லான்பிள்ளைபெற்றால் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் சிவசங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மட்டுமின்றி வழக்கறிஞர்கள், தமிழ்நாடு பார் கவுன்சில் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி ஆடியோவை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர்கள் விழுப்புரம் எஸ்பியிடம் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், போலீஸ்காரர் சிவசங்கரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சஷாங்சாய் உத்தரவிட்டுள்ளார்.