சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எல்.சி. தரப்பில், இந்த விவகாரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரு தரப்புக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையும் நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு தொழிற்சங்க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்றவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நிர்வாகம் அதனை பின்பற்றவில்லை. வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை என்றார். இரு தரப்பு வாதங்களும் முடிவடையாததால், வரும் 17ம் தேதி ஸ்டிரைக் நடத்த கூடாது என்று தொழிற்சங்கத்தினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.