சென்னை: என்எல்சி சுரங்கத்தில் தொடர்ந்து நடக்கும் விபத்துகள் மூலம் தொழிலாளர்கள் உயிரிழப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி என்எல்சி அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, விபத்தில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்ஜாமீன் மீது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதில், என்எல்சியில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. சுரங்க விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடோ, கருணை தொகையோ தரவில்லை என தொழிலாளர்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, என்எல்சி தரப்பு வாதிடுகையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது என என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, என்எல்சியில் ஓரிரு முறை விபத்து என்றால் எதோ தொழிலாளர்கள் கவனக்குறைவு என எடுத்துக்கொள்ளலாம். தொடர் விபத்து உயிரிழப்பு என்றால் அதனை எப்படி எடுத்துக்கொள்வது என கேள்வி எழுப்பியது. மேலும் , இந்த வழக்கு விசாரணயை வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.