Saturday, June 21, 2025
Home செய்திகள்இந்தியா ஆட்சியை காப்பாற்ற பட்ஜெட்டில் சலுகை மழை பீகாருக்கு ரூ.60,000 கோடி ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி: நிதிஷ்குமார், சந்திரபாபுநாயுடு ஹேப்பி அண்ணாச்சி

ஆட்சியை காப்பாற்ற பட்ஜெட்டில் சலுகை மழை பீகாருக்கு ரூ.60,000 கோடி ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி: நிதிஷ்குமார், சந்திரபாபுநாயுடு ஹேப்பி அண்ணாச்சி

by Karthik Yash

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தற்போது கூட்டணி ஆட்சியாக நடக்கிறது. 18வது மக்களவை தேர்தலில் பா.ஜவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் உதவியுடன் மோடி தொடர்ந்து 3ம் முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளார். இந்த சூழலில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்க நிதிஷ், சந்திரபாபுநாயுடு கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்த மோடி அரசு, பட்ஜெட்டில் பணமழை பொழிந்து அவர்களை திக்குமுக்காட வைத்து இருக்கிறது.

குறிப்பாக பீகாருக்கு ரூ.60 ஆயிரம் கோடியும், ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. பீகாரில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள், ரூ.11500 கோடி மதிப்பில் வெள்ளதடுப்பு மற்றும் நிவாரணபணிகளுக்கு நிதி ஒதுக்கீடு,2400 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி, விஷ்ணுபாதம், மகா போதி, ராஜ்கிர் ஜைன ஆலயம் ஆகியவை மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கங்கை ஆற்றின் மீது இரண்டு புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன.

நாளந்தா பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கும், நாளந்தா-ராஜ்கிர் வழித்தடம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும் , கொல்கத்தா-அமிர்தசரஸ் வழித்தடத்திற்கான தலைமையகமாக கயா நகரை மேம்படுத்தும் வகையில் பீகாரிலும் மூன்று புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதோடு பீகாரில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆந்திராவின் மறுகட்டமைப்புக்காக இந்த நிதியாண்டில் தலைநகர் அமராவதியின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.15,000 கோடியை ஒதுக்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

வரும் ஆண்டுகளில் அமராவதியின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தருவதாகவும், போலவரம் நீர்ப்பாசனத் திட்டம், தொழில்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு, பின்தங்கிய பகுதிகளுக்கான மானியங்கள் ஆகியவற்றுக்கு நிதியளிப்பதற்கும், விரைவுபடுத்துவதற்கும் உரிய நிதி வழங்கப்படும். கொப்பர்த்தி (விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை மண்டலம்) மற்றும் ஓர்வாகல் (ஐதராபாத்-பெங்களூரு தொழில்துறை மண்டலம்) ஆகியவற்றின் உள்கட்டமைப்புக்கான நிதியும் வழங்கப்படும் என்றார். மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, ராயலசீமா, பிரகாசம் மற்றும் வடக்கு கடலோர ஆந்திராவின் பின்தங்கிய பகுதிகளுக்கான மானியங்களும் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த அறிவிப்புகள் மூலம் நிதிஷ்குமார், சந்திரபாபுநாயுடு ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி கூறுகையில், ‘பீகாரில் நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ. 26,000 கோடி, வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கியது மகிழ்ச்சி’ என்றார். ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு கூறுகையில்,’ஆந்திரப் பிரதேச மக்கள் சார்பாக, பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பட்ஜெட்டில் நமது மாநிலத்தின் தேவைகளை உணர்ந்து, தலைநகரம் போலவரம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒன்றிய அரசின் இந்த ஆதரவு ஆந்திராவை மீண்டும் கட்டியெழுப்புவதில் நீண்ட தூரம் கொண்டு செல்லும். இந்த முற்போக்கான மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் பட்ஜெட்டை சமர்பித்ததற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

* 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர உதவும் – மோடி
2024-25 நிதிநிலை அறிக்கை குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, “3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை உத்வேகம் அளிக்கும். வளர்ந்த இந்தியாவுக்கான உறுதியான அடித்தளத்தை அமைக்கும். இளைஞர்கள், பெண்கள், பின்தங்கிய பிரிவினர், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் கவனம் செலுத்தி உள்ளது. வேலை வாய்ப்பு தொடர்பான ஊக்க அறிவிப்புகள் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த தொலைநோக்கு வரவு, செலவு திட்டம் சமானிய மக்கள், விவசாயிகள் உள்பட சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் மேம்படுத்தும். அனைவரின் பிரகாசமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்” என தெரிவித்தார்.

* 15 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு
ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் பாட்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ம் ஆண்டு ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்டதில் இருந்து 77.65 சதவீதம் அல்லது 15,00,27.135 கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் 100 சதவீதத்தை நெருங்கி வருகின்றன. பீகாரில் 96.08சதவீதம், உத்தரகாண்டில் 95.02 சதவீதம், லடாக்கில் 93.25 சதவீதம், நாகலாந்தில் 91.58 சதவீதம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் 2.28லட்சம் கிராமங்கள் மற்றும் 190 மாவட்டங்கள் குடிநீர் குழாய் இணைப்பு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

* பெண்கள், சிறுமிகளுக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு
ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பட்ஜெட்டில் ரூ.26,092 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இது ரூ.25,448 கோடியாக இருந்தது. இதுதவிர, பட்ஜெட்டில் பல்வேறு அமைச்சகங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சி என்றும் குறிப்பிட்டார். பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, பணிபுரியும் பெண்களுக்கான அரசு விடுதிகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான துணை திட்டங்களுக்கு ரூ.2,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறையில், அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்திற்கு மட்டுமே ரூ.21,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நிர்பயா நிதிக்கு தொடர்ந்து ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஆந்திர பொருளாதாரத்திற்கு ஆக்சிஜன் -முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ஆந்திராவின் பொருளாதார அமைப்பிற்கு ஒன்றிய பட்ஜெட் ஆக்சிஜன் கொடுத்துள்ளது போன்று உள்ளது. விரைவில் ஆந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் நேரத்தில் கொடுத்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார்.

* பூடானுக்கு கூடுதல் நிதி மாலத்தீவுக்கு நிதிகுறைப்பு
அண்டை நாடுகள் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கும் திட்டத்தின் கீழ் பூடானுக்கு அதிகபட்சமாக ரூ.2,068 கோடி நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மாலத்தீவுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய ரூ.770 கோடியில் இருந்து ரூ.400 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 29,121 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு நிதிகுறைக்கப்பட்டு ரூ.22,154 கோடி ஒதுக்கப்பட்டது. நேபாளத்திற்கு ரூ. 700 கோடி, இலங்கைக்கு கடந்த ஆண்டு 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.245 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi