ராஜ்கிர்: பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாய்க்கு சிகிச்சை அளிக்க சென்ற ஒரு டாக்டரை மரத்தில் கட்டி வைத்து கும்பல் தாக்கியுள்ளது. பாலியல் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. போலீசார் வந்து அந்த டாக்டரை மீட்டனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில்,நலந்தா மாவட்டம் ராஜ்கிரில் அரசியல் சட்ட பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நேற்று நடந்தது.
இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: ஒரு காலத்தில் அமைதி மற்றும் நீதியின் பூமியாக பீகார் இருந்தது. ஆனால் இன்று இந்தியாவின் குற்ற தலைநகராக மாறிவிட்டது. மோடி தலைமையிலான பாஜ அரசு ஒருபோதும் உண்மையான சாதி கணக்கெடுப்பை நடத்தாது. அவர்கள் உண்மையான சாதி கணக்கெடுப்பை நடத்தும் நாளில், அவர்களின் அரசியலும் முடிவுக்கு வரும். சாதி கணக்கெடுப்பில் இரண்டு மாதிரிகள் உள்ளன – பாஜ மாதிரி, இன்னொன்று தெலங்கானா மாதிரி. பாஜ மாதிரியில், அதிகாரிகள் ஒரு மூடிய அறையில் கேள்விகளைத் தீர்மானிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில் ஓபிசி, தலித் அல்லது பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் இல்லை. தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு சாதி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் எங்கு ஆட்சி அமைத்தாலும், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். அது பீகாரில் இருந்து தொடங்கும் என்றார்.