பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் எல்என் மிஸ்ரா நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். தொடர்ந்து ரூ.10கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும் 20 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையையும் அவர் வழங்கினார். அப்போது முதல்வர் நிதிஷ்க்கு கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சித்தார்த் சிறிய பூந்தொட்டி ஒன்றை பரிசளித்தார். இதனை வாங்கிய முதல்வர் நிதிஷ் அடுத்த நொடியே அதனை சித்தார்த் தலையில் வைத்தார். இதனை உடனடியாக அகற்றியபடி கூடுதல் தலைமை செயலாளர் அங்கிருந்து சென்றுவிட்டார். இது கூட்டத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
மேலும் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி நிதிஷ் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி கூறுகையில், முதல்வரின் இந்த செயல் வெட்கக்கேடானது. அவரது செயல்பாடுகள் மாநிலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றது. அவரது மனம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இது காட்டுகின்றது” என்றார்.