Tuesday, June 24, 2025
Home செய்திகள்Banner News நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் டெல்லி சென்றார் சோனியா, ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் இன்று பங்கேற்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் டெல்லி சென்றார் சோனியா, ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் இன்று பங்கேற்பு

by Karthik Yash

சென்னை: டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகல் டெல்லி சென்றார். கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய பிரதமர் மோடியை முதல்வர் வலியுறுத்துவார். முன்னதாக, நேற்று மாலை சோனியா, ராகுல்காந்தியை அவர்களது இல்லத்துக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். அந்த வகையில், நிதி ஆயோக்கின் இந்த ஆண்டுக்கான (2025) கூட்டம் இன்று (24ம் தேதி) காலை 9.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம் முறையாக ஒன்றிய அரசு சார்பில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு பங்கேற்கிறார்.

இதற்காக, நேற்று காலை 9 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு, சென்னை பழைய விமான நிலைய கேட் எண் 6 பகுதிக்கு வந்தார். அங்கு முதல்வருக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்து சால்வை, புத்தகங்கள் வழங்கி வழியனுப்பினர். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் முருகானந்தம், செயலாளர் சண்முகம், தனி உதவியாளர் தினேஷ்குமார் மற்றும் 2 பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த பயணிகள் விமானம் நேற்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.50 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைந்தது. டெல்லி சென்ற முதல்வருக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், பி.வில்சன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, முரசொலி மற்றும் எம்பிக்கள், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி டி.கே.எஸ்.விஜயன், தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் உள்ளிட்ட பலரும் விமான நிலையத்திற்கு வந்து பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

பொதுமக்கள் பலரும் குறிப்பாக பெண்கள் டெல்லி விமான நிலையம் வந்து முதல்வருக்கு சால்வை கொடுத்து, கைகுலுக்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு முதல்வர் சென்றார். டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 4 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது.

தொடர்ந்து, டெல்லி சாணக்யபுரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்லி சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தின் பழைய கட்டிடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் கடந்த 2024 ஜூலை 26ம் தேதி தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து அங்கு கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

புதிய கட்டிடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்பு தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கி, 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்னர், முதல்வர் ஸ்டாலின், ஜம்மு காஷ்மீர் மாநிலம், பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி டாக்டர் பரமேஸ்வரனை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

அப்போது தமிழக அமைச்சர் எ.வ.வேலு, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், பொதுத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆகியோர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். காலை 9.30 மணிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க பிரதமரிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதியை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், தமிழ்நாடு அரசுக்கு நியாயமாக தர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை ஒன்றிய அரசு தரவில்லை என்றும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி தரப்படும் என்று ஒன்றிய அரசு சொல்வது ஏற்புடையது இல்லை என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேச உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடக்கிறது. அப்போது கிடைக்கும் இடைவெளியில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று சில முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். குறிப்பாக இந்தியா கூட்டணியை சேர்ந்த மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரையும் முதல்வர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு, இன்று இரவு 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

* சோனியா, ராகுலை சந்தித்தது குடும்பத்துடன் இருந்த உணர்வு
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தது, குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: சோனியா காந்தியையும், அன்பு சகோதரர் ராகுல் காந்தியையும் டெல்லியில் அவர்கள் வசிக்கும் இல்லத்தில் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது. ஒருபோதும் இது வெறும் சந்திப்பாக இல்லாமல், குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வையே அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi