மதுரை: ஆஸ்திரேலியா அருகே கைலாசா நாட்டில் நித்யானந்தா உள்ளதாக ஐகோர்ட் கிளையில் பெண் சீடர் தெரிவித்தார். திருவண்ணாமலை நித்யானந்த பீடத்தை சேர்ந்த நித்தியானந்தா (எ) ராஜசேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பக்தராக மதுரை ஆதீனம் மடத்திற்குள் நுழைய தடை விதிக்க கூடாது. எனக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரை ஆதீனம் மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, அறநிலையத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியாகிளெட் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் எங்கு உள்ளார்?. கைலாசா நாடு எங்கு உள்ளது?. அங்கு எப்படி செல்வது? என கேட்டனர்.
பின்னர் நீதிபதிகள், வழக்கு விசாரணையை பார்வையிட வந்திருந்த நித்யானந்தா சீடரைப் பார்த்து, நீங்கள் அங்கு சென்றுள்ளீர்களா?. அங்கு செல்ல பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உள்ளதா? என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து, நித்யானந்தாவின் சீடர் அரச்சனா என்றவர் நீதிபதிகள் முன் ஆஜராகி, ஆஸ்திரேலியா அருகில் யூஎஸ்கே (யுனைடெட் ஸ்டேட் ஆப் கைலாசா) என்ற தனி நாட்டில் நித்யானந்தா உள்ளார். இந்த நாட்டிற்கு ஐநா சபையின் அங்கீகாரம் உள்ளது. எங்கள் சார்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கறிஞரை மாற்றி வைத்துக் கொள்ள அனுமதித்து விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.