Saturday, June 14, 2025
Home ஆன்மிகம் சோழர்களின் வீர தெய்வமான நிசும்பசூதனி

சோழர்களின் வீர தெய்வமான நிசும்பசூதனி

by Lavanya

தேவி பாகவதத்தில் சும்ப நிசும்பர்கள்

சத்தியத்தின் நேர்துருவங்களாக, கொடுங்கோன்மையின் முழு உருவாக இருந்த சும்ப நிசும்ப சகோதரர்களின் அணுக்கத் தொண்டர்களான சண்டனும், முண்டனும் இமயக்கிரியில் திரிந்திருந்தபோது கௌசீகியை கண்டனர். சிம்மத்தின் மீது அமர்ந்த அழகுச் சிகரத்தைப் பார்த்து திகைத்துப் போயினர். தம் அசுரத் தலைவர்களுக்கு இவளை அர்ப்பணித்தால் என்ன என்று குரூரமாக யோசித்தனர். சும்பனிடம் தாம் கண்ட பேரழகுப் பெண்ணைப் பற்றிச் சொல்ல காமம் தலைக்கேறியது, இவளே மாதேவி என அறியாத அற்பன் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள யோசித்தான்.

அவனின் அழிவு ஒரு விதையாக போக வடிவெடுத்து வந்தது.அசுரனின் அரசவையில் அழகிய குரலையுடையோனான சுக்ரீவன் என்பானை அழைத்தான். ‘எப்படியாயினும் இனிய மொழி பேசி அரசவைக்கு அழைத்துவா’ என்றான். மன்னனின் கட்டளையை மாதேவ னின் வாக்காக ஏற்று அதிவிரைவாக இமயக் கிரியை அடைந்தான். கிரி கன்னிகையாக அமர்ந்திருந்த கௌசீகியை பார்த்து, ‘’சும்பனின் அரசவையை ஒளிரூட்டும் பேரழகு படைத்தவளே…’’ என்று தொடங்கி அமிர்த வாக்காலும், மயக்கு வார்த்தைகள் பேசி சம்மதமா என்று முடித்தான். இவள் சம்மதித்து விடுவாள் என்றே முகத்தைப் பார்த்தான்.

அதேபோல அவளும் சம்மதம் என்றாள். ஆனால், ‘‘யார் என்னுடன் போரிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே மணப்பேன். அதையே நான் வரமாகப் பெற்றிருக்கிறேன்’’ என்றாள். ஒரு வஞ்சகப் பேச்சுக்கு மறு வார்த்தையாக இன்னொரு விஷத்தை வார்த்தைகளில் தோய்த்துப் பேசினாள்.கடுங்கோபத்தோடு நுழைந்தவன் விவரம் சொல்ல சும்பன் தூம்ரலோசனனை அழைத்தான். ‘தூம்ரம்’ என்றால் ‘புகை’ என்று பொருள். பொங்கும் புகையோடு பெரும் படையோடு கிளம்பியவன் கௌசீகியின் எதிரே கர்ஜிக்க, அவள் வாகனமாக இருந்த சிம்மத்தின் ஹூங்காரத்திலேயே கரைந்து வீழ்ந்தான்.

தூம்ரலோசனன் மாண்டான் என்பதை கேள்வியுற்ற சும்ப – நிசும்பரின் படைத் தலைவர்களாக விளங்கிய சண்டனும், புத்தியற்ற வெறும் உடற் கொழுப்பு கொண்ட முண்டனும் எங்களுக்கு நிகர்த்தவள் யாரவள் என்று திமிறிக் கிளம்பினர். மாபெரும் படையோடு வந்தவர்கள் கௌசீகியை பார்த்து, ‘இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அப்படியே எங்களோடு வந்துவிடு’ என ஒரு அம்பை சிம்மத்தின் பிடரி பார்த்துச் செலுத்தினான்.

கௌசீகியின் கண்கள் சிவந்தது. அசுரப் படையின் ஒரு பகுதியை தம் கதையாலே ஏவித் தாக்கியபோதுதான் முதன் முறையாக சிம்மவாஹினி சாதாரணமானவள் இல்லை. இவளே சாமுண்டி என்பதை சண்ட, முண்டர்கள் உணர்ந்தார்கள். இதற்குப் பின்னால் தேவர்களின் சூழ்ச்சியே நிறைந்துள்ளது என்று எண்ணியவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். அதுவரை சாந்தமாக இருந்தவளின் நெற்றிப் பொட்டிலிருந்து மாகோரமிக்க அதிபயங்கர உருவோடு காளி வெளிப்பட்டாள்.

காளியின் விஸ்வரூபமும் வதமும்

தெற்றுப் பற்களோடு கூடிய அதிகோர முகமும், செம்பட்டைச் சடையும், கன்னங்கரிய வளாக இருந்தாள். கத்தியும், கழுத்தைச் சுருக்கிட்டு இழுத்துப் போடும் பாசமும், கபாலம் சொருகிய கட்வாங்கம் என்ற குண்டாந்தடியும், அனேக கபாலத்தை மாலையாக பிணைத்து கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டாள். தலையில்லா உடலை இடையில் கட்டி முடிந்திருந்தாள். வரிப்புலியின் தோலை உரித்து சேலையாக்கி போர்த்திக் கொண்டிருந்தாள். உடல் முழுதும் ரத்தக் குழம்பை கஸ்தூரி சந்தனமாகப் பூசிக்கொண்டாள்.

உலகம் முழுதும் துழாவிப் புசிப்பது போல் நாவைச் சுழற்றியபடி இருப்பவளின் கண்கள் செந்தணல் துண்டங்களை எரிமலையாகப் பொழிந்தது. அவள் கர்ஜிப்பு தாங்காது அசுரர்களின் ரத்தமே உறைந்து போயிற்று.தேவியின் வாள் நிசும்பனின் தலையை வெட்டியது. சும்பனை சூலத்தால் மார்பினில் பாய்ச்சினாள். சண்ட, முண்டர்களை அழுத்திக் கொன்றாள். தேவர்களும், வானவரும் கண்களில் நீர் பெருக இருகைகூப்பி துதித்தனர். ‘ஜெய் நிசும்பசூதனி’ என்று ஜெயகோஷம் எழுப்பினர். இதுவே மகா சரஸ்வதியான சத்தியம், தர்மத்தை நிலைத்துச் செய்ய வந்த நிசும்பசூதனி.

சோழர்களின் வீர தெய்வமானாள்அது சோழர்களின் தொடக்கக் காலம். நிசும்பசூதனியே வெற்றித் தெய்வம். சத்ரு நாசம் செய்யும் மாகாளி என எண்ணிய சோழகுலச் சக்ரவர்த்தியான விஜயாலயச் சோழன் எண்ணூற்று ஐம்பவதாவது வருடம் தஞ்சையில் நிறுவினான். போருக்குச் செல்லும் போதெல்லாம் ‘தஞ்சையைக் காப்பாய் தேவி’ என்று அவள் பாதம் பணிந்துவிட்டுத்தான் யுத்த களத்திற்குச் செல்வானாம். மிகவும் ஆதாரப்பூர்வமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் ‘‘தஞ்சாபுரீம் சௌத சுதாங்கராகாம…. என்று தொடங்கும் வடமொழி வரிகளில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற காளிதேவியை அங்கு பிரதிஷ்டை செய்தான்.

ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் அவள் திருவடி பணிந்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவார்களாம். தேவி மகாத்மியம் உரைக்கும் உருவத் தோற்றத்தை சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் சோழர்கள். மிக கோரமான உருவம். மூக்கு அழுந்தி அதற்குக் கீழே தெற்றுப்பற்கள் துருத்தியிருக்க, ஒரு ஓரமாய் தலைசாய்த்து அரை பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் நிசும்பசூதனி. தீச்சுடர் போன்ற கேசம். வற்றிய தோலும், விலா எலும்புகளோடு கூடிய பதினாறு கைகள். அதில் விதம்விதமான ஆயுதங்கள். பாம்பை கச்சமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

கால்கள் மெல்லியனவாக இருந்தாலும் காலுக்குக் கீழே நான்கு அசுரர்களை வதைத்து அழுத்தும் கோபத்தை சிற்பத்தில் வடித்திருப்பது பார்க்கப் பிரமிப்பூட்டும். இவர்களே சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன். யுத்த களத்தில் உக்கிரமாக போர் புரியும்போது நெஞ்சு நிமிர்த்தி எதிரியை நோக்கி பாயும் வன்மத்தையும், அதனால் முதுகுப் புறம் சற்று வளைந்து குழிவாக இருப்பதையும், எதிர்காற்றில் கபால மாலைகள் இடப்புறம் பறக்கும் வேகத்தையும் சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். பெண் எனும் சக்தி பொங்கியெழுந்தால் இப்படித்தான் வீறுகொண்டெழும் என்பதே நிசும்பசூதனி சொல்லும் விஷயம். அதேசமயம் தர்மத்தின் பக்கம் நிற்கும், நீதி தேவதை.

எப்படிச் செல்வது?

தஞ்சாவூர் நகர எல்லைக்குட்பட்ட கரந்தைக்கு அருகே பூமால்ராவுத்தன் எனும் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. பொதுவாக இந்த ஆலயத்தை வடபத்ரகாளியம்மன் என்றே அழைப்பார்கள். சிறிய கோயில்தான். ஆனால், காலத்தால் பழையதும் சாந்நித்தியத்தில் வலிமையானதும் ஆகும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi