பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் குத்துச்சண்டையில் ஆடவர் 71 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், மெக்சிகோவின் மார்கோ வேர்டுடன் நேற்றிரவு பலப்பரீட்சை நடத்தினார். நிஷாந்த் தேவ் முதல் ரவுண்டில் சிறப்பாக ஆடினார். கடைசி இரண்டு ரவுண்டுகளில் மார்கோ வேர்ட் கம்பேக் கொடுத்தார். முடிவில் 4-1 என்ற கணக்கில் மார்கோ வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். நிஷாந்த் தேவ் வென்று அரையிறுதிக்குள் நுழைந்திருந்தால், வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பு நழுவியது. ஏற்கனவே குத்துச்சண்டையில் அமித், வீராங்கனைகள் நிகாத் ஜரீன், ப்ரீத்தி பன்வார், ஜாஸ்மின் ஆகியோர் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 5வது வீரரான நிஷாந்த்தேவும் பதக்க வாய்ப்பை தவறவிட்டு வெளியேறி உள்ளார்.
தற்போது லவ்லினா மட்டும், பதக்க போட்டியில் உள்ளார். இன்று மாலை 3.02 மணிக்கு 75 கிலோ எடை பிரிவில் சீனாவின் லி கியானுடன் மோதுகிறார். இதில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தால் லவ்லினா வெண்கல பதக்கத்தை உறுதி செய்வார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 69 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். ஆனால் இந்த ஒலிம்பிக்கில் 69 கிலோ எடை பிரிவு நீக்கப்பட்டுவிட்ட நிலையில், 75 கிலோ பிரிவில் களம் இங்குகிறார். இன்றைய போட்டியில் லவ்லினா வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது. லி கியான் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி, 2016 ரியோவில் வெண்கலம் என 2 பதக்கம் வென்றுள்ளார். முன்னாள் உலக சாம்பியன், இரண்டு முறை ஆசிய சாம்பியன் மற்றும் நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியனாகவும் உள்ளார். கடந்த ஆண்டு ஆசிய போட்டியில் பைனலில் லவ்லினாவை 5-0 என வீழ்த்தி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இன்று முக்கிய போட்டிகளில் களம் இறங்குகிறது. ஆடவர் ஹாக்கி கால்இறுதியில் மதியம் இங்கிலாந்துடன் இந்தியா மோதுகிறது. துப்பாக்கி சுடுதலில் ஆடவர் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டர் தகுதி சுற்றில் விஜய்வீர்சிங், அனிஷ், மகளிர் பிரிவில் மகேஸ்வரி சவுகான், ரைஜா, மகளிர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் முதல் சுற்றில் பாருல் சவுத்ரி, ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதி சற்றில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் மற்றும் பாய்மரபடகு, கோல்ப் போட்டியிலும் இந்திய வீரர்கள் இன்று பங்கேற்கின்றனர். 8 நாட்கள் முடிவில் பதக்க பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 16 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என 37 பதக்கம் வென்றுள்ளது. அமெரிக்கா 14 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம், பிரான்ஸ் 12 தங்கம், 14 வெள்ளி, 15 வெண்கலம், ஆஸ்திரேலியா 12 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம், இங்கிலாந்து 10 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கல பதக்கத்துடன் முதல் 5 இடத்தில் உள்ளன.இந்தியா 3 வெண்கலத்துடன் 54வது இடத்தில் உள்ளது.