கோவை: ‘லோன் தராம அலைய வைக்கிறாங்க’ என்று கோவையில் ஒன்றிய நிதி அமைச்சர் பங்கேற்ற விழாவில் தொழிலதிபர் மேடை ஏறி புகார் கூறினார். கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் கோவை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கடன் வழங்கும் விழா நேற்று நடந்தது. ரூ.3749 கோடி கடன் தொகையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். விழா துவங்கியதும் கடன் வாங்க வந்த மக்கள் கூட்டத்தில் இருந்த சதீஷ் என்ற தொழிலதிபர், ‘‘நான் பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.40 லட்சம் கடன் கேட்டிருந்தேன். லோன் தராம அலைய வைக்கிறாங்க… வங்கி அதிகாரிகள் என்ன பண்றாங்கன்னு தெரியவில்லை. அதனால்தான் கேட்க வந்திருக்கிறேன். நான் மேடத்திடம் பேசனும்…’’ என்றார்.
அப்போது நிர்மலா சீதாராமன் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். ‘‘நிறைய பேருக்கு லோன் கொடுத்து அவர்களின் தொழில் வளரனும் என்று முயற்சித்து வருகிறோம். பேங்க்ல போய் கடன் கேட்டு கொடுக்கல என்று ஒருத்தர் மன வேதனைப்படுவதை ரொம்ப ஆர்வமா கவர் பண்ணிக்கொண்டிருக்கிற மீடியா நண்பர்களுக்கு ஒரு ரெக்குவஸ்ட் கொடுக்கிறேன். இங்க நடக்கிற நிகழ்ச்சியை கவர் பண்ற மாதிரி அதையும் கவர் பண்ணுங்க. அந்த நண்பரை நான் மேடைக்கு அழைக்கிறேன். உங்க மன வேதனைய சொல்லுங்க. ஏன் கிடைக்கலன்னு சொல்லுங்க. நான் ஆய்வு செய்து அந்த பேங்கலேயே கேட்கிறேன். ஏன் கொடுக்க முடியல என்று. முடிந்தால் அவருக்கு கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார்.
இதையடுத்து சதீஷ் மேடைக்கு வந்து பேசும்போது, ‘லாக் டவுன்ல எனது ஆபிஸ் பணம் எல்லாம் யூஸ் ஆனது. எனவே பணம் தேவைப்பட்டது. நான் வங்கியை அணுகினேன். கிடைக்கல. ஆனால் இங்க சொல்றாங்க ஆகஸ்ட்ல வந்தவங்களுக்கு செப்டம்பரில் பணம் கொடுத்துட்டோம் என்று. நீங்க சொல்வது உண்மைன்னா எப்போ கொடுப்பீங்கன்னு சொல்லுங்க. இல்லையென்றால் என்ன காரணத்துக்காக ரிஜெக்ட் பண்றீங்கன்னு சொல்லுங்க என்றார். அவரிடம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். இந்த சம்பவம் கோவையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
* 100 பேருக்கு திட்டமிட்டால் 20 பேருக்குத்தான் போகுது
கடன் வழங்கும் விழாவில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘நாங்கள் அதிக திட்டங்களை போட்டு வைத்திருக்கிறோம். இதை வங்கி நிர்வாகம் மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என பிரதமர் சொல்லியிருக்கிறார். 100 பேருக்கு திட்டமிட்டால் 20 பேருக்குதான் திட்டம்போய் சென்றடைகிறது. ஒன்றிய அரசு கூடுதலாக செஸ் வரி வசூலிப்பதாக பல்வேறு மாநிலங்கள் கூறுகிறது. செஸ் வரியை தானே வைத்து கொள்வதில்லை. ஏழை மக்களின் பொருளாதார மேம்பாடு, வேளாண் அபிவிருத்தி திட்டங்களுக்காக கடன் உதவி மூலமாக மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது’’ என்றார். இதைத்தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் உள்ள ஒன்றிய அரசின் ராணுவ தளவாட ஆராய்ச்சி மையத்தை அமைச்சர் பார்வையிட்டார். கனரா வங்கி சார்பில் நடந்த தூய்மை பாரத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை பீளமேடு பாரதி காலனி பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த நபர்களுடன் சேர்ந்து அங்கு இருந்த குப்பைகளை சுத்தம் செய்து அகற்றினார்.