இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் அனைவருமே வேலைக்கு செல்பவர்களாக தான் இருக்கிறார்கள். தினமும் சாப்பிடும் நொறுக்கு தீனி வகைகளுக்கோ மற்றும் பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சிகள் போன்ற விழாக்கால நிகழ்வுகளுக்கோ வீட்டில் தயாரிக்க நேரமின்றி இனிப்பு மற்றும் காரவகைகளை கடைகளில் தான் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் தயாரிப்புகள் தரத்துடன் கூடிய சுவையாக இருக்கிறதா? ஆரோக்கியமானதா? என்று பார்த்து தான் வாங்குகிறார்கள். அவ்வகையில் இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிப்பில் ஆரோக்கியத்தைப் பிரதானமாக கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அனுபவங்களுடன் இனிப்பு வரலாறாக இருக்கிறார்கள் மஞ்சு நிர்மல் குமார் குப்தா குடும்பத்தினர். “எனது மாமனார் மற்றும் கணவரின் உதவியுடன் முப்பது வயதில் இத்தொழிலை கையிலெடுத்தேன் தற்போது வரை பல்வேறு தடைக்கற்களை கடந்து எங்களது பாரம்பரிய தொழிலை விரிவுபடுத்தி சிறப்பான வகையில் நடத்தி வருகிறேன்” என்கிறார் வடசென்னை மின்ட் பகுதி மற்றும் அண்ணாநகர் பகுதியில் ஸ்வீட் கடைகளை நடத்திவரும் மஞ்சு நிர்மல் குமார் குப்தா. பல வருடங்களாக இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரித்து விற்பனை செய்து இத்தொழிலில் வரும் பல்வேறு சவால்களை முறியடித்து மிகச்சிறந்த பெண்தொழில் முனைவோராக ஜொலித்து வருகிறார் மஞ்சு. தற்போது அடுத்த தலைமுறையான தனது மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோரின் கரம் கோர்த்து தொழிலை திறம் பட நிர்வகித்து வருகிறார். தங்களது தயாரிப்புகளின் ஐம்பது வருட பாரம்பரியம் குறித்தும் அதன் தற்போதைய மாற்றங்கள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
உணவு சார்ந்த இததொழிலுக்குள் நுழையும் ஆர்வம் எப்படி இருந்தது?
எனக்கு திருமணமாகி வந்த காலத்தில் நான் சாதாரண குடும்பத் தலைவியாக மட்டும்தான் இருந்தேன். எனது மாமனார்தான் இத்தொழிலை ஆரம்பித்து திறம் பட நடத்திவந்தார். எங்களது தயாரிப்புகள் ஐம்பது வருட பாரம்பர்யங்கள் மிக்கது. அவருடன் எனது கணவரும் இத் தொழிலை நிர்வகித்து வந்தார். எனக்கு சிறுவயதிலிருந்தே தொழில்துறையில் இறங்கும் ஆர்வம் இருந்து வந்தது. எனது முப்பதாவது வயதில் எனது மாமனார் மற்றும் கணவரின் உதவியுடன் துணிச்சலாக இத்தொழிலில் இறங்கினேன். அவர்களிடம் புதுப்புது விஷயங்கள் மற்றும் தொழிலின் நெளிவு சுளிவுகளையும் மிக விரைவாகவே கற்றுக்கொண்டேன். இந்த இருபது வருட தொழில் அனுபவ சூழலில் நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்தும் விட்டேன். தற்போது எனது மகன் எம்பிஏ முடித்து விட்டு என்னோடு இத்துறையில் இணைந்திருக்கிறார். அதே போன்று எனது மகளும் எம்பிஏ கிராஜுவேட் தான். எனது மருமகன் மற்றும் மகளும் இத்தொழிலில் எங்களோடு இறங்கியுள்ளனர். என் மாமனார் காலத்தைய பாரம் பரிய தயாரிப்புகளின் அதே சுவை மற்றும் தரத்தோடு இக்கால தலைமுறையான எங்களது பிள்ளைகளின் நவீனத்துவங்களோடும் மிக சிறப்பான வகையில் இத்தொழிலை முன்னெடுத்து செல்ல முடிகிறது. எங்களது வாடிக்கையாளர்களின் தொடர்ந்த ஆதரவும் வரவேற்பும் எங்களை அடுத்தடுத்த வெற்றிகளுக்கு கொண்டு செல்கிறது.
உங்களது பாரம்பர்யமிக்க தயாரிப்புகளின் தனிச்சிறப்புகள் என்ன?
எனது மாமனார் காலத்திலிருந்தே எங்கள் தயாரிப்பான இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு தனி மரியாதையும் வரவேற்பும் இருந்து வருகிறது. தற்போது வரை அதன் தரத்திலும் சுவையிலும் நாங்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதே இல்லை. எங்களது தயாரிப்புகளான இனிப்பு வகைகள் முழுவதுமே சுத்தமான நெய்யினால் மட்டுமே தயாரித்து அளிக்கிறோம். அதேபோன்று கார வகைகளைத் தரமான கடலை எண்ணெய் பயன்படுத்தி மட்டுமே தயாரித்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்தும் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் அனைத்துமே முதல் தரமானவை. பாதாம் பருப்புகளை கலிபோர்னியாவிலிருந்து வரவழைத்து உபயோகிக்கிறோம். நாங்கள் தினமும் ப்ரெஷான இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரித்து விற்பனை செய்கிறோம். அதேபோன்று எங்களது பேக்டரியில் தயாரிக்கும் இனிப்பு மற்றும் காரவகைகள் எங்களது நேரடியான கண்காணிப்பில் தயாரித்து வருகிறோம். மிகவும் சுத்தமான வகையில் தரம் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்கள் சுவையோடு ஆரோக்கியத்திற்கும் உகந்ததுதானே. தற்போது 130 பேருக்கு மேல் எங்களிடம் பணிபுரிந்து வருகிறார்கள். சுத்தமான நாட்டு மாட்டுப் பாலில் தயாரித்த ப்ரெஷ் பனீர்கள் மற்றும் கோவா எங்களிடம் கிடைக்கும். குல்கந்து மற்றும் மில்க் பேணி கேசர்பேணி என விற்பனை செய்கிறோம்.
தற்போதுள்ள வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப என்னென்ன விஷயங்களை புகுத்தி வருகிறீர்கள்?
இனிப்பு மற்றும் காரவகைகள் மட்டுமின்றி தற்போது சாட் அயிட்டங்களை தயாரித்து வழங்கி வருகிறோம். மாலை நேரங்களில் போடப்படும் சுவையான சாட் ஐயிட்டங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. அதே போன்று நிறைய புதிய புதிய இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். தற்போது 120 வகையான அயிட்டங்களை தயாரித்து அளிக்கிறோம். அல்வாவில் மட்டுமே பல வகைகள் எங்களிடம் கிடைக்கும். முதலில் எங்களது கடையில் மட்டுமே வியாபாரம் நடைபெற்றது. தற்போது சமூக வலை தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிலும் எங்களது தயாரிப்புகள் மிகப் பிரபலம். எங்களது தயாரிப்புகள் இந்தியா முழுவதும் வாங்கப்படுவதோடு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கூட நிறைய வாங்கிச் செல்கிறார்கள். சாட் ஐயிட்டங்களில் புதிய வகைகளை நிறைய தயாரிக்க இருக்கிறோம். நாங்கள் தொழில் ஆரம்பித்த காலம் முதல் தற்போது வரை கைகளால் மட்டுமே பொருட்களை தயாரித்து அளிக்கிறோம். எந்த வகையிலான மிஷின்களையும் பயன்படுத்தி தயாரிப்பதே கிடையாது.
உங்கள் எதிர்காலத் திட்டங்கள் தொழில் விரிவாக்கம் குறித்து?
எங்களது முதல் கடை மின்ட் பகுதியில் தான் நீண்ட காலமாக இயங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியில் ஒரு கிளையினை திறந்து மிகச் சிறப்பான முறையில் தொழிலை நிர்வகித்து வந்தோம். இப்பகுதி மக்களின் அமோக வரவேற்பு மிக சிறந்த வகையில் எங்களுக்கு கிடைத்து வருகிறது. இந்த உற்சாகத்திலும் உத்வேகத்திலும் இன்னும் சில பகுதிகளில் கிளைகளை துவங்க உத்தேசித்துள்ளோம். எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளாக அடையாறு மற்றும் தி. நகர் பகுதியில் புதிய கிளைகளை துவங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். இன்னும் நிறைய புதிய முயற்சிகளோடு இத்தொழிலில் களம் காண ஆர்வமாக இருக்கிறோம். நல்ல தரமான பொருட்களுக்கு வாடிக்கையாளர்களிடையே சிறந்த வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கும். அதே போன்று இனிப்பு மற்றும் கார வகைகளில் நிறைய புதிய வெரைட்டிகளை முயற்சிக்க வேண்டும் என்கிற ஆசைகளும் இருக்கிறது. நிறைய விழாக்கள், திருமண நிகழ்வுகளுக்கான மொத்த ஆர்டர்களும் கிடைத்து வருகிறது. எங்களது முந்தைய தலைமுறையின் பாரம்பரிய சுவையோடு இத் தலைமுறையின் நவீன ஐடியாக்களையும் புகுத்தி வருவதால் எங்களது தொழில் அடுத்த கட்டத்தை நோக்கி சிறந்த முறையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.
தொழில்முனைவோராக சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு சொல்ல விரும்புவது?
பெண்கள் சவால்களை எதிர்கொள்ளும் மனதோடு புதிய முயற்சிகளில் துணிந்து இறங்க வேண்டும். எந்த தொழிலிலும் தடைகளும் பிரச்சனைகளும் வந்து கொண்டே தான் இருக்கும். நாம்தான் அதனை துணிச்சலுடன் முறியடித்து தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும். நாம் தயாரிக்கும் பொருட்களுக்கான தரத்தில் சுவையில் ஆரோக்கியத்தில் அதிக கவனம் கொண்டாலே போட்டிகள் நிறைந்த இத்தொழிலில் நீடித்து நிலைத்து நிற்கலாம். பெண்கள் தனித்தன்மையுடன் தன்னம்பிக்கையோடு தொழிலில் இறங்கினாலே வெற்றி நம் வசப்படும் என்கிறார் மஞ்சு நிர்மல் குமார் குப்தா.
– தனுஜா ஜெயராமன்.