லண்டன்: ரூ.6,500 கோடி கடன் மோசடி வழக்கில் இங்கிலாந்து சிறையில் இருக்கு நிரவ் மோடிக்கு 10வது முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,500 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான வைர வியாபாரி நிரவ் மோடி, கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஜாமீன் கேட்டு இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து முறையிட்டு வருகிறார். சமீபத்தில் 10வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீனை நீதிமன்றம் மறுத்துள்ளது. ஜாமீனில் வெளியே விட்டால் அவர் தப்பியோடுவார் என்ற அச்சம் மற்றும் அவர் சாட்சிகளை கலைக்க பாதிக்க வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் கருதியது.
இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவை வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,150 கோடி ரூபாய்) மோசடி தொகையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த மோசடியில் நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மெகுல் சாக்ஸி ஆகியோர் மோசடி கடன் உத்தரவாத ஆவணங்களை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். முன்னதாக நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது நிரவ் மோடியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நிரவ் மோடியின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டதால் அவரால் தப்பியோட முடியாது’ என்று வாதிட்டார். ஆனால் நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்கவில்லை.
கடந்த 2018ல் இந்தியாவை விட்டு தப்பியோடிய நிரவ் மோடி, 2019ல் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு 2021ல் இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருவதால், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு தாமதமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.