திருவனந்தபுரம்: கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 17 பேர் மரணமடைந்தனர். தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக நிபா வைரஸ் காய்ச்சல் பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகும் கடந்த சில வருடங்களாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி உள்பட 2 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டம் மங்கடா என்ற பகுதியை சேர்ந்த 17 வயதான ஒரு பள்ளி மாணவி கடந்த இரு வாரங்களுக்கு முன் நிபா காய்ச்சல் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இந்த மாணவி மரணமடைந்தார். இவரது ரத்த மாதிரியை பரிசோதித்ததில் இந்த மாணவிக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பாலக்காட்டை சேர்ந்த 38 வயதான ஒரு பெண்ணுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவர் பெரிந்தல்மண்ணா என்ற இடத்திலுள்ள உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேருக்கு நிபா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் 6 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.