நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் 7 சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைன் மரக்காடுகள் படப்பிடிப்புத்தலம், கேரன்ஹில், 8, 9th மைல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்ததால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல் ஊட்டி-எமரால்டு சாலையில்மரம் வேரோடு சாய்ந்து உயர் அழுத்த மின்கம்பம் மீது விழுந்ததன் காரணமாக மஞ்சனகோரை, முத்தோரை பாலாட், முள்ளிக்கூரை, கப்பத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. மேலும் நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கார், ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் வாகனங்களும் சேதம் அடைந்தன.
இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி, எட்டாவது மைல், படப்பிடிப்பு தளம், பைன் காடுகள், கேரன்ஹில் மற்றும் 9-வது தளம் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது