புதுடெல்லி: நீலகிரி யானை வழித்தட ஆக்கிரமிப்பு வழக்கு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள பகுதியில் யானைகளின் வழித்தடத்தில் நில ஆக்கிரமிப்பு செய்து ஓய்வு இல்லங்கள் (ரிசார்ட்) மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு தடை விதிக்குமாறு கோரி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விவசாயிகள், ஓய்வு இல்லங்களின் உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள் காலி செய்து நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அவை முழுமையாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை அல்லது அகற்றப்படவில்லை. அதையடுத்து யானை ராஜேந்திரன் என்பவர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஆக்கிரிமிப்புகள் அகற்றப்படவில்லை’ என்று கோரியிருந்தார். இதற்கிடையே மேற்கண்ட வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக 2 பேர் கமிட்டி அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ‘ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் மாநில அரசு முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியாக கமிட்டி அமைத்து ஆய்வு செய்ய வேண்டியதில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தது. மேற்கண்ட வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி போபண்ணா முன் விசாரணைக்கு வந்தபோது, ‘யானைகள் வழித்தட நில ஆக்கிரமிப்பு தொடர்பான ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே 2 பேர் ஆய்வு கமிட்டி தேவையா? என்பதை மனுதாரரும், எதிர் மனுதாரரும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம்’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.